சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் தசி என்கிற சிவகுமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ். ரியல் எஸ்டேட் செய்துவரும் நாகராஜுடன் தொழில் சம்பந்தமாக கேரளத்துக்கு நண்பர்கள் 4 பேரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு காரில் சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பின்னர் கேரளத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் புறவழிச்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த பக்கவாட்டுச் சுவறில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிவி சீரியல் இசையமைப்பாளரான தசி என்கிற சிவகுமார் (49), சென்னையைப் பூர்வீகமாக கொண்ட ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழடியான் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபரான நாகராஜ் (50), மூவேந்திரன் (55) ஆகியோர் பலத்த காயங்களுடன் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.