சூரியனும், புலப்படாத மர்மமும்: பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். இதன் வயது 460 கோடி ஆண்டுகள். சூரியனின் சராசரி விட்டம் சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர். இது பூமியின் விட்டத்தைவிட 110 மடங்கு பெரியது. இது புவியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல்வேறு ரகசியங்கள் புதைந்துள்ள சூரியனைப் பற்றி எப்போதுமே விலகாத மர்மம் ஒன்று உள்ளது.
சூரியனின் மையப்பகுதி 5,600 டிகிரி வெப்பநிலை கொண்டது. சூரியனைச் சுற்றியுள்ள வளிமண்டலமான கரோனாவின் வெப்பநிலை 5 முதல் 10 லட்சம் டிகிரியாகும். அதாவது சூரியனின் மையத்தை விட அதன் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருப்பதுதான் அறிவியலாளர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. ஆதித்யா எல்-1 விண்கலம் அதற்கான விடையைக் கண்டறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வுக் கருவிகளின் பணிகள்: விஇஎல்சி எனும் தொலைநோக்கி சூரியனின் ஒளிமண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்வதுடன், அதில் இருந்து வெளியேறும் ஆற்றல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளும். இது தினமும் 1,440 படங்களை புவிக்கு அனுப்பவுள்ளது. இந்தக் கருவியை பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு மையம் இஸ்ரோவுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது.
> ‘எஸ்யுஐடி’ எனும் மற்றொரு தொலைநோக்கி கருவியானது சூரியனின் முதல் 2 அடுக்குகளான போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் குறித்தும், கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும்ஆய்வு செய்யும். இந்தக் கருவியை புனேவில் உள்ள விண் வெளி இயற்பியல் ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது.
> மேக்: மேக்னிடோ மீட்டர் எனும் கருவி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே எல்-1 பகுதியில் நிலவும் காந்தபுலத்தை அளவிடும் திறன் கொண்டது. இதை பெங்களூரில் உள்ள எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம் ஆய்வகம் உருவாக்கியுள்ளது.
> சோலேக்ஸ் எஸ் அண்ட் ஹெல்10எஸ்: சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்யும். அந்தக் கதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் இதன்மூலம் அறிய முடியும். பெங்களூரு யூஆர்ராவ் செயற்கைக்கோள் மையம்இந்த 2 கருவிகளையும் தயாரித்துள்ளது.
> ஏபெக்ஸ் அண்ட் பாபா: ஆதித்யா சூரிய ஆற்றல் துகள் பரிசோதனை மற்றும் ஆதித்யா பிளாஸ்மா பகுப்பாய்வு என்ற இந்த 2 கருவிகளும் சூரிய புயல்கள் குறித்தும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. இதில் ஆஸ்பெக்ஸ் கருவியை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வகமும், பாபா கருவியை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையமும் வடிவமைத்துள்ளன.
லாக்ராஞ்சியன் புள்ளி: பொதுவாக இரு கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை மற்றும் மைய விலக்கு விசை 5 இடங்களில் சமமாக இருக்கும். இதை லாக்ராஞ்சியன் புள்ளி என்று அழைப்பர். சூரியன், புவிக்கு இடையேயும் 5 லாக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. இங்கு ஒரு விண்கலம் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலையில் இருக்க முடியும். அதன்படி புவியின் முன்புறத்தில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு அருகேதான் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இங்கிருந்து கிரகணம் உட்பட அனைத்து சூழல்களிலும் சூரியனை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்தபுள்ளி கோள்களின் சுழற்சிக்கு ஏற்ப 23 நாட்களுக்கு ஒருமுறை மாறும். இதனால் இந்த இடத்தில் இருந்து இயங்கும் விண்கலமும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கிடையே சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவில் நூறில் ஒரு பங்கு தூரத்தில்தான் ஆதித்யா நிலைநிறுத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசா விண்ணில் செலுத்திய ‘பார்க்கர்’தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலமாகும். இது சூரியனை 62 லட்சம் கி.மீ தொலைவில் இருந்து ஆய்வு செய்து வருகிறது.
விண்வெளி ஆய்வில் அசத்தும் தமிழர்கள்: அறிவியல் ஆய்வுக்காகவும் அவ்வப்போது விண்கலங்களை இஸ்ரோ செலுத்தி வருகிறது. அந்தவகையில் முழுவதும் அறிவியல் ஆய்வுக்காகவே மட்டும் இதுவரை 5 விண்கல ஏவுதல் திட்டங்களை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. அவை சந்திரயான்-1, 2, 3, மங்கள்யான், அஸ்ட்ரோசாட் ஆகியவையாகும். இதில் அஸ்ட்ரோசாட் தவிர்த்து மற்ற 4 விண்கலங்கள் வடிவமைப்பிலும் திட்ட இயக்குநர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றிருந்தனர்.
சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 பணியில் வனிதா, சந்திரயான்-3-ல் வீரமுத்துவேல் மற்றும் மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோர் திட்ட இயக்குநர்களாகத் திறம்பட செயலாற்றி அதன் வெற்றியில் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
அந்த வரிசையில் சூரிய ஆய்வுக்காக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் வடிவமைப்பிலும் திட்ட இயக்குநராக தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்காட்டையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றியுள்ளார். இஸ்ரோ வரலாற்றில் முக்கியத்துவமான அறிவியல் திட்டங்களில் தொடர்ந்து தமிழர்கள் பங்களிப்பை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
சூரிய வெடிப்பு: ஆதித்யா எல்–1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி சூரியனின் ஒளி, நிற மண்டலம், வெளிப்புற அடுக்குகள், வெடிப்பு சிதறல் ஆகியவை பற்றி ஆய்வு செய்யவுள்ளது. இதை பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்தக் குழுவில், தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சூரியனில் நிகழும் வெடிப்பு சிதறல்களின்போது வெளிப்படும் அதிக ஆற்றலால்புவியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதனால் அதை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் விஇஎல்சி தொலைநோக்கி மூலம் சூரிய வெடிப்புகளை தொடர்ந்து கண்காணித்து நமக்கான இழப்புகளைத் தடுக்க முடியும்’’ என்றார்.