சிங்கப்பூர்
நகர நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப்பின் பதவிக்காலம் வருகிற 13-ந் தேதி முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் (வயது 66) வெற்றி பெற்றார். அவருக்கு 70.4 சதவீத வாக்குகள் கிடைத்தன.
வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய தர்மன் சண்முகரத்னம், ‘நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும், இது அரசியல் தேர்தல் அல்ல என உணர்ந்து, அறிவுப்பூர்வமாக வாக்களித்துள்ளனர். என் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, கட்சி சார்பற்ற நபராக என்னை தேர்வு செய்துள்ளனர். இது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.அதிபர் பதவியை நிறைவு செய்யும் ஹலிமா யாகோப்பை சந்தித்து நான் அவரின் அறிவுரையையும், ஆலோசனையையும் பெறுவேன்’ என்றார்.
சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியில் மூத்த மந்திரி, துணை பிரதமர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை தர்மன் சண்முகரத்னம் வகித்துள்ளார். அவர் 6 ஆண்டுகாலத்துக்கு அதிபராக இருப்பார்.தர்மன் சண்முகரத்னத்தின் தந்தை சண்முகரத்னம், பிரபல மருத்துவ விஞ்ஞானி ஆவார். ‘சிங்கப்பூர் நோயியல் துறையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.தர்மன் சண்முகரத்னத்தின் மனைவி ஜேன் யுமிக்கோ இட்டோகி வக்கீல். ஜப்பான்-சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு மாயா என்ற மகளும், அகிலன், அறன், அறிவன் என்ற 3 மகன்களும் உள்ளனர்.
தர்மன் சண்முகரத்னத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அதிபராக தர்மன் சண்முகரத்னத்தை மாபெரும் ஆதரவுடன் சிங்கப்பூர் மக்கள் தேர்வு செய்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.மேலும் அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியா-சிங்கப்பூர் உறவை மேலும் வலுப்படுத்த நான் உங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், சிங்கப்பூருக்கான உக்ரைன் நாட்டு தூதர் கட்டேரினா ஜெலங்கோ உள்ளிட்டோரும் தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.