புதுடெல்லி,
இந்தியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜி20 மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். இந்த வருடம் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதாவது, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வருகிற 9 மற்றும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது, “உலக நாடுகள், வழிகாட்டுதலுக்காக இந்தியாவை எதிர்பார்க்கின்றன. 2047-ல் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அந்த சுதந்திர தின விழாவினைக் கொண்டாடும் பொழுது இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறி இருக்கும். அதன்பிறகு நமது வாழ்வில் ஊழல், ஜாதி மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு இடமிருக்காது.
நமது வார்த்தைகள் உலக நாடுகளால் வெறும் யோசனைகளாக பார்க்கப்படுவது அல்ல, எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாக பார்க்கப்படுகின்றன. உலக நாடுகள், இந்தியாவை பார்க்கும் விதமும் மாறி வருகிறது. முன்னதாக அவைகள், இந்தியாவை பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடாக கருதின. ஆனால் தற்போது, திறமை வாய்ந்த மக்கள் மற்றும் லட்சியம் கொண்ட மக்கள் நிறைந்த நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.
டெல்லியை தவிர, வெற்றிகரமாக உயர்மட்ட உலகளாவிய சந்திப்புகளை நடத்துவதற்கு மக்கள் மீது முந்தைய அரசாங்கங்களுக்கு நம்பிக்கை இல்லை.
விரைவில் இந்தியா உலகின் சிறந்த 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும்.
சைபர் அச்சுறுத்தல்களை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உக்ரைன்-ரஷ்யா மோதலில் இந்தியா யாருக்கும் பக்கபலமாக இல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது சில தரப்பிலிருந்து விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
ஜி20 தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நான் மேற்கொள்வேன்.” இவ்வாறு அவர் கூறினார்.