மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. இந்த ஆண்டு முடிவதற்குள் மக்களவை தேர்தல் வந்துவிடும். அதுவும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்கூட்டியே வரக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை தொடர்ந்து முழங்கி வந்த பாஜக, தற்போது அதன் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி வியூகம்குறிப்பாக ’இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்துள்ளன. இவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை என மூன்று கூட்டங்களை நடத்தி சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக 400 தொகுதிகளில் பாஜக உடன் நேரடி போட்டிக்கு தயாராகும் வகையில் வியூகம் வகுத்து வருகின்றனர்.’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்இது நிச்சயம் பாஜகவிற்கு சவாலாக இருக்கக் கூடும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடுவதற்குள் தேர்தலை கொண்டு வந்துவிட்டால் வெற்றி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக கணக்கு போட்டு வருகிறது. இதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விஷயத்தில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கலும் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கலைத்தாக வேண்டும்.
பாஜக கணக்குதமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சிக்கு இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் பாஜக கணக்குப்படி பார்த்தால் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயம் வரும். இது மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக்கும் பொருந்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தேசிய அளவில் அனலை கிளப்பி பெரும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்இந்நிலையில் தான் 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் எதற்காக என விளக்கம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்து ஒப்புதல் பெறத் தான் என்ற பேச்சு பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுஏனெனில் சமீபத்தில் தான் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் குறித்து ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய இருக்கின்றனர். இவை அனைத்தும் பொருத்தி பார்த்தால் சிறப்பு கூட்டத்தொடரில் ஏதே பரபரப்பு சம்பவம் காத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக இந்தியா டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், வரும் சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி ஏதேனும் சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 92 சதவீத மக்கள் ’ஆம்’ என்று பதிலளித்துள்ளனர். 5 சதவீத மக்கள் ’இல்லை’ என்று பதில் கொடுத்தனர். 3 சதவீதம் பேர் ’எதுவும் சொல்ல முடியாது’ எனக் கூறிவிட்டனர். எப்படி பார்த்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் மூலம் தங்களுக்கு சாதகமான ஒரு விஷயத்தை அரங்கேற்றி தேர்தல் களத்தில் ஒரு அடி முன்னே செல்ல பாஜக வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.