புதுடெல்லி: சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். என தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.