சென்னை:
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படலாம் என்று பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் இதுவரை கூறிய பல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வரும் நிலையில், சீமானும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றி சென்றுவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் விஜயலட்சுமியிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியிடம சீமான் தன்னை ஏமாற்றியதற்கான ஆதாரங்களையும், வாக்குமூலத்தையும் விஜயலட்சுமி அளித்திருக்கிறார்.
விஜயலட்சுமி கூறிய வாக்குமூலத்தில் உண்மைத்தன்மை இருப்பது ஊர்ஜிதமானால் சீமான் கைது செய்யப்படுவார் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, நேற்று இரவே சென்னையில் இருந்து தனிப்படை போலீஸார் சீமானை கைது செய்ய ஊட்டி விரைந்திருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள ட்வீட் தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதில், “நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த புகாரை 2012-ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். மீண்டும் விஜயலட்சுமி புகார் அளித்திருப்பதால், சீமான் கைது செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது” என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில் சீமானை “ஒன் நேஷன் ஒன் அதிபர்” என்றும் சவுக்கு சங்கர் கிண்டல் அடித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, பொன்முடி வீட்டில் ரெய்டு என சவுக்கு சங்கர் கூறும் விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் சீமானும் கைது செய்யப்பட்டு விடுவாரோ என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.