ஸ்ரீஹரிகோட்டா: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மனிதர்களின் எதிர்கால வாழ்வுச் சூழலுக்கு சூரியக் குடும்பம் குறித்த ஆய்வுகள் முக்கியமானவையாகும். ஏனெனில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களின் பரிணாமங்களையும் சூரியன்தான் நிர்வகிக்கிறது. சூரியனின் மாற்றங்களை அறிய, அதன் நிகழ்வுகள் பற்றிய புரிதல் அவசியம். குறிப்பாக, பூமியை நோக்கிவரும் சூரியப் புயல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அவற்றின் தாக்கத்தைக் கணிக்கவும் சூரியன் குறித்த ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
அந்தவகையில், செவ்வாய், நிலவைப் போன்றே, சூரியன் தொடர்பான ஆய்விலும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நீண்டகாலமாகவே ஆர்வம் காட்டிவருகிறது.
பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ என்ற திட்டத்தை அறிவித்தது.
இதில், சுமார் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தி, சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா மண்டலத்தை, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) என்ற பகுதியில் இருந்து பார்க்கும்போது, துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
அதற்கேற்ப தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ச்சி பெற்றதையடுத்து, ஆதித்யா–1 திட்டம் ‘ஆதித்யா எல்–1’ திட்டமாக மாறியது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் வடி வமைத்தனர்.
இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.
இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ராக்கெட் ஏவுதலின் இறுதிக்கட்டப் பணிகளுக்கான 23.40 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.
648 கி.மீ. உயரத்தில்…: தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின்னர், தரையில் இருந்து 648 கி.மீ. உயரம் கொண்ட, குறைந்த புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது. பின்னர், விண்கலத்தில் உள்ள இயந்திரம் இயக்கப்பட்டு, அதன் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக உயர்த்தப்படும்.
15 லட்சம் கி.மீ. தொலைவில்…: அதன்படி, ஆதித்யா சுற்றுப்பாதை உயரம் 4 முறை மாற்றப்பட்டு, பின்னர் புவிவட்டப் பாதையில் இருந்து விண்கலம் விலக்கப்பட்டு, எல்-1 பகுதியை நோக்கிப் பயணிக்கும். மொத்தம் 125 நாட்கள் பயணத்துக்குப் பிறகு புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 புள்ளி அருகே, சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) விண்கலம் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு, சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்யும்.
சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிக்கும் இஸ்ரோ: விண்வெளி ஆராய்ச்சியில் மங்கள்யான், சந்திரயான் என பல்வேறு சாதனைகளை இஸ்ரோ செய்துவருகிறது. இதன்மூலம், விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக இந் தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அண்மையில், நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இஸ்ரோ, அடுத்த இலக்காக சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்தியா அந்த வரிசையில் 4-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7 வகையான ஆய்வு சாதனங்கள்: ஆதித்யா எல்-1 வின்கலத்தில் சூரியனின் வெளிப்புற அடுக்குகளைக் கண்காணிக்க 7 வகையான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு, நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள 3 கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுளால், அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை எல்-1 பகுதியில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை ஆராய்ந்து கணிக்கும். இதன்மூலம், விண்வெளியில் கிரகங்களுக்கு இடையேயான சூரிய இயக்கவியலின் விளைவு குறித்த விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஆதித்யா எல்-1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப் பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளைக் கண்டறிவதுடன், சூரியப் புயல்களின் தாக்கங்களையும் கண்காணிக்க முடியும். சூரியனின் செயல்பாடுகள், அதன் பண்புகள் மற்றும் வானிலையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
சூரியனில் இருந்து வரும் காந்தப் புயல், நமது செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, விண்வெளி வானிலையில் காந்தப்புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேவைப்படும். அதை ஆதித்யா விண்கலம் நமக்கு வழங்கும். இந்த திட்டத்துக்காக இஸ்ரோ ரூ.380 கோடி செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.