விஜய் நடிப்பில் வெளியாக உள்ள `லியோ’ படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்குக் லைகா நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது.
லைன் கிங் படத்தில், சிங்கத்தின் கால்தடத்தில் கால் வைக்கும் குட்டி சிங்கத்தின் கிளிப்பைப் பகிர்ந்து இந்தச் செய்தியின் முன்னறிவிப்பை லைகா புரொடெக்சன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
விஜய் குடும்பத்திற்கும், சினிமாவிற்கும் பெரிய தூரமில்லை. அவரின் அப்பா, அம்மா, மாமா எனப் பலரும் திரைத்துறையைச் சார்ந்தே இருந்திருக்கின்றனர்.
இராமநாதபுரத்திலிருந்து சினிமாவே லட்சியம் எனக் கிளம்பி வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவருடையது நீண்ட நெடிய சினிமா பயணம். கமர்ஷியல் சினிமாவின் அத்தனை சாத்தியங்களையும் செய்து பார்த்த மனிதர். மிகவும் கஷ்டப்பட்டு வெற்றியின் படிக்கட்டுகளைத் தொட்டார். ராம் தியேட்டருக்கு எதிராக உள்ள சாலையில் சிறு வீட்டில் தங்கியிருந்த காலம் அவருக்கு இருந்தது. நல்ல வேளையாக அவர் உயர்நிலைக்கு வந்து படங்கள் செய்து துலக்கமான வெற்றியைப் பெற்ற பிறகே விஜய் பிறந்ததால் அப்பாவின் போராட்ட வாழ்வை அவர் கண்டதில்லை.
மகனைப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் இருக்க விடலாம் அல்லது நாமே ஒரு தொழிலில் விஜய்யை நிறுத்தி விடலாம் என்றுதான் சந்திரசேகர் நினைத்திருந்தார். ஆனால் நடந்தது வேறு. நடிக்கப் போகிறேன் என மகன் வந்து நிற்பார் என்று. எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் நடந்தது. தன்னைவிட சிறந்த இயக்குநர்களிடம் மகனைச் சேர்பித்து அறிமுகப்படுத்தி விடலாம் என்ற ஆசையும் நிறைவேறவில்லை. விஜய்யை இயக்கிய அவரது படங்களும் அவருக்குத் தனித்தன்மையைத் தரவில்லை. விக்ரமனின் ‘பூவே உனக்காக’ விஜய்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. முதல் தடவையாக ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைத்தார்கள். அதற்குப் பிறகு சந்திரசேகர் அவரைக் கையில் எடுத்துக் கொண்டார். கதையும், சம்பளத்தையும் மட்டும் கவனித்துக் கொண்டு எல்லா இயக்குநர்களிடம் விஜய்யை படம் செய்ய அனுமதித்தார். படங்கள் கவனம் ஈர்த்து ரசிகர்கள் வெறித்தனமாகப் பெருகினார்கள். நடனம், பாடல் பாடுவது என விஜய்யின் பன்முகத் திறமை அவருக்குக் கைகொடுத்தது.
இன்று விஜய் அடைந்திருக்கும் உயரம் அவரே செதுக்கிக் கொண்டது. படங்கள், இயக்குநர்கள், பிற நடிகர்கள், வெளியிடும் காலம் என எல்லாமே வைரல் செய்தியாகின்றன. விஜய் சினிமாவில் வந்தது திட்டமிட்ட நிகழ்வல்ல. ஆனால் அதற்குப் பிறகு இதுவரை அடைந்த பெரும் உயரம் எல்லாம் சரியாகத் திட்டமிட்டதுதான். தோல்வியில் முடிந்த படங்கள், அரசியல் பகடையில் சிக்கி ‘தலைவா’வில் பட்ட அனுபவம் கூட அவருக்கு இருக்கிறது. சினிமாவில் அறிமுகமாகும் எல்லோரும் இரு தலைமுறை ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்ததில்லை. இப்போது சரியான பருவத்தில் வந்து நிற்கிறார் விஜய். அவர் தொட்டது எல்லாம் துலங்குகிறது. சொல்லப்போனால் அப்பாவின் துணை இல்லாமல் தனித்து சினிமாவில் செயல்பட விஜய் எடுத்த முடிவு முக்கியமானது.
அடுத்து வரும் ‘லியோ’வின் வியாபாரமும், எதிர்பார்ப்பும் கரை கடந்து நிற்கின்றன. விஜய்யின் தன்முனைப்பு அவரை எல்லாக் காலங்களிலும் கைத்தூக்கி விட்டிருக்கிறது. யார் சூப்பர் ஸ்டார் என்று எழுந்த பேச்சுக் கூட அவரது திரை செல்வாக்கை முன்வைத்து எழுந்ததுதான். இப்போது புது இயக்குநர்களைத் தேடத் தொடங்கியிருக்கிறார். அவர் படங்கள் பரிசோதனைக்காக இல்லாமல் பொழுது போக்கின் நிறைவம்சங்களாக இப்போது அமைந்து வருகின்றன. இந்த வேளையில் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய்யின் மகன் சஞ்சய்.
சினிமாவே கனவு என்று நேரடியாக வளர்ந்த பையன். நடிக்க வருவார் என நினைத்தால் இயக்குவதில் இறங்கிவிட்டார். பையனின் விருப்பத்திற்குத் தடை எதுவும் சொன்னதில்லை. அதிகப்படியாக தன் அப்பா எடுத்துக் கொண்ட சுதந்திரத்தை மகனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் திரும்பவும் சஞ்சய் நடிக்க வருவதற்கான வாய்ப்பு 100% இருக்கிறது. நெடுநாளாக ஊறியிருக்கும் கதையை எடுத்துவிட நினைக்கிற மகனின் முதல் ஆர்வத்திற்கு விஜய் தடையாக இருக்கவில்லை.
லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படித்திருக்கிறார் சஞ்சய். தான் உருவாக்கிய ஸ்கிரிப்டை இரண்டு பெரிய நிறுவனங்களிடம் சொன்னார். அதில் ஒன்றான ‘லைகா’ சுபாஸ்கரனுக்குக் கதை ரொம்பவும் பிடித்துப்போக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. படத்தில் சஞ்சய் நடிக்கவில்லை. ஒரு நல்ல இளம் ஹீரோவிற்கான தேடல் தொடர்ந்து நடக்கிறது.
15 நாள்களுக்குள் ஹீரோவைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். கதை டார்க் காமெடி வகையில் அமைந்திருக்கிறது. தாத்தா S.A சந்திரசேகர் வீட்டுக்குப் போய் அவரிடம் ஆசி பெற்றுவிட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறார் சஞ்சய். இந்த ஒப்பந்தம் ஆகும்போது விஜய்யும் கூட இருந்திருக்க வேண்டியது. ஆனாலும் சஞ்சய்யின் சினிமா வாழ்க்கையில் தன் பங்கு எப்பொழுதும் நெருக்கடியாக இருந்து விடக்கூடாது என்றும், சஞ்சய்யின் சுதந்திரம் முக்கியம் என்றும் விஜய் நினைக்கிறாராம்.
அதனால் கதை மற்றும் தயாரிப்பில் தனது எந்தக் குறுக்கீடும் இருக்காது எனத் தயாரிப்பு நிறுவனத்திடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் விஜய். அதனால் தன் கதைக்குத் தேவையான வேலைகளில் சுதந்திரமாக இறங்கிவிட்டார் சஞ்சய். தன்னை மனதில் வைத்து, சஞ்சய்க்கு யாரும் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் விஜய்.
மகன் மீதான நம்பிக்கை, திறமையின் மீது மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லி விட்டார். இந்த வெளிப்படைத் தன்மையில் குளிர்ந்துவிட்டார்கள் லைகா நிறுவனத்தினர். அஜித்தின் நெருங்கிய நண்பரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திராதான் இந்தப்படத்திற்கும் மக்கள் தொடர்பாளர் என்ற செய்தி மேலும் சுவாரஸ்யமானது.