ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமித் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளோ கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது முழு ஆதரவு தருவோம் என அறிவித்துள்ளார். இதனால் அரசின் ஏற்படும் பெரும் பொருட்செலவு குறையும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவரை அந்த குழுவுக்கு தலைவராக போட்டுள்ளார்கள். குடியரசுத் தலைவராக இருந்தவர் கட்சி சார்பின்றி அனைவருக்கும் பொதுவானவர். அவர் அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் தலையிடுவது மரபு இல்லை.
ஆனால், அதையெல்லாம் கேவலப்படுத்திவிட்டு தாங்கள் சொன்னால் கேட்பார் என்பதற்காக ராம்நாத் கோவிந்தை தலைவராக போட்டுள்ளனர். சரி உறுப்பினர்களையாவது அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக போட்டார்களா என்றால் அதுவும் இல்லை. நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியா உள்ள திமுகவுக்கு அதில் பிரதிநிதிகள் இல்லை. தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக தலையாட்டி பொம்மைகளை வைத்து ஒரு குழுவை அமைத்து சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று விமர்சித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தலால் செலவு குறையும் – அண்ணாமலை
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்த்த அதிமுக, தற்போது ஆதரவு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையால் அதிமுகவும் பலிகடாவாகும். தாம் பலிகடா ஆகப்போகிறோம் என்பது தெரியாமலேயே அதிமுக ஆதரிக்கிறது.
இந்த சட்டத்தை அமல்படுத்தினால் எந்த கட்சியும் இந்தியாவில் செயல்பட முடியாது. எந்த கட்சியையும் நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தலைவன் என ஒன் மேன் ஷோவாக அனைத்தும் மாறிவிடும். திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் திமுக ஆட்சியை கலைத்துவிடுவீர்களா? அதிபராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. பாஜக தேர்தல் செலவுகளை குறைக்கிறதோ இல்லையோ கொள்ளையடிப்பதை குறைக்க வேண்டும்” என குற்றம்சாட்டினார்.