நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெகன் பாண்டியன். 34 வயதான இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாநகர துணைச் செயலாளரான மூளிகுளம் பிரபுவுக்கும் இடையே நீண்டகாலப் பகை இருந்துள்ளது. இந்த நிலையில் ஜெகன் கொலைசெய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
அண்மையில் பா.ஜ.க-வில் சேர்ந்த ஜெகன், நெல்லைக்கு அண்ணாமலை வந்தபோது அவருக்காக ஊரில் உள்ள மக்களைத் திரட்டிச் சென்றுள்ளார். அத்துடன் கோயில் விழாவிலும் பிரபுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். அவரது வளர்ச்சி பிடிக்காத மூளிகுளம் பிரபு, தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு ஜெகனை கொலைசெய்ததாக ஜெகனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30-ம் தேதி இரவு மூளிகுளம் கிராமத்தில் பாளையங்கால்வாய் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த ஜெகனை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தக் கொலையின் பின்னணியில் மூளிகுளம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பதாக ஜெகனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதனால் அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெல்லை சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் ஜெகனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெகனின் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷ், அனீஸ், சந்துரு, பாஸ்கர், பரமராஜ் உள்ளிட்ட 11 பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனர். இருப்பினும் முக்கிய குற்றவாளியான தி.மு.க பிரமுகர் மூளிகுளம் பிரபு கைதுசெய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருந்ததால், அவரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று நெல்லையில் இருந்து பெங்களூரு தப்பிச் செல்வதற்காக காரில் சென்ற மூளிகுளம் பிரபு, நெல்லை மாவட்ட எல்லையில் வாகனச்சோதனையின்போது பிடிபட்டார். அவரை கைதுசெய்த போலீஸார் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் துணை ஆணையர்களான அனிதா, சதீஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தி.மு.க நிர்வாகி மூளிகுளம் பிரபு கைதுசெய்யப்படாததால் கடந்த நான்கு நாள்களாக ஜெகன் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே உள்ளது. தற்போது பிரபு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை 11 பேர் கைதாகியுள்ளனர். அதனால் ஜெகனின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY