பிறந்து 28 நாள்களேயான குழந்தை மரணம்; `உசிலம்பட்டியில் மீண்டும் பெண் சிசுக்கொலையா?' – போலீஸ் விசாரணை!

உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘பெண் சிசுக்கொலையா?’ என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றம்

30 ஆண்டுகளுக்கு முன்புவரை பெண் குழந்தைகளைச் சுமை என்று கருதி, கருவிலும், பிறந்த பின்பும் கொல்கிற `கொடூர பழக்கம்’ மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. சமூகத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்த இந்தப் பழக்கத்தை ஒழிக்க ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு `தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டு வரப்பட்டு, இந்த வட்டாரத்தில் ஒவ்வொரு கிராமமும் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதால் இந்தப் பழக்கம் மறைந்தது.

இந்த நிலையில், சமீபகாலமாக பெண் சிசுக்கொலை சம்பவங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளதாக அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில பெற்றோர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

சிசுக்கொலை

இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் – லாவண்யா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்த குழந்தையுடன் தாயை 5-வது நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு விவசாய வேலைகள பார்த்துக்கொண்டிருந்த லாவண்யா, சிறிது நேரம் கழித்து குழந்தையை வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குழந்தை

பின்பு தெரிந்தவர்களிடம் தகவல் தெரிவிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை பிறந்து 28-வது நாளிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பெண் சிசுக்கொலையா?’ என்ற கோணத்தில் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.