போலி ஆவணங்கள் மூலம் திருட்டு வாகனங்களை விற்ற 6 பேர் கைது
ஆண்டிபட்டி: திருட்டு வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து இணையதள விளம்பரம் மூலம் விற்பனை செய்த 6 பேரை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் அன்புசெல்வம் தன்னிடம் (டி.என். 15 இ.7816) என்ற பதிவு எண் கொண்ட மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதுகுறித்து விசாரித்த தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளத்தைச் சேர்ந்த மதன்ராஜ் அந்த காரை ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்துக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மறுநாள் அன்புச் செல்வம் கூறியபடி வாகனத்திற்குரிய பணத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருக்கும் மதுரை மாவட்டம் கோச்சடையை சேர்ந்த முருகன், கொடிகுளத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோரிடம் கொடுத்து காரை பெற்று சென்றார்.
கார் பறிமுதல்
மதன்ராஜ் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ்க்கு விற்றார். அந்த கார் திருட்டு வழக்கில் இருப்பதாக கூறி கேரள போலீசார் ஆக. 16 ல் பறிமுதல் செய்தனர். மதன்ராஜிடம் கொடுத்த பணத்தை விக்னேஷ் திரும்ப கேட்டுள்ளார். அன்புசெல்வம் முருகன், ஆனந்த் தன்னை ஏமாற்றி விட்டதாக மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
அன்புச்செல்வம், ஆனந்த் ஆகியோர் இணையதளம் மூலம் விளம்பரம் செய்து தென்காசி மாவட்டம் அழகர் நாயக்கன்பட்டி சேர்ந்த அயோத்திய ராமன் என்பவருக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்துக்கு (டி.என்.57 டபிள்யூ1596) என்ற டிராக்டரை விற்பனை செய்துள்ளனர். ஜூன் 23ல் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் இதே பதிவு எண்ணில் வேறொரு டிராக்டர் இருப்பதாக கூறி டிராக்டரை பறிமுதல் செய்தனர். போலியான பதிவு எண்ணில் டிராக்டரை விற்று ஏமாற்றியதாக அயோத்திய ராமன், ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.
இப்புகார் குறித்து தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே ஆலோசனையில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ.,க்கள் சுல்தான்பாட்ஷா, பிரேம்ஆனந்த், வரதராஜ் மற்றும் போலீசார் கொண்ட குழு பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உசிலம்பட்டி கொடிக்குளத்தைச் சேர்ந்த அன்புசெல்வம் 49, திருட்டு வாகனத்தை வாங்கி போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்யும் கும்பலின் தலைவனாக இருந்துள்ளார்.
ஆவணங்கள் தயார் செய்த பின் வாகனங்களை விற்பனை செய்யும் பணிகளை கொடிக்குளம் ஆனந்தன் 48, மதுரை முடக்கு சாலை முருகன் 47, ஆகியோரும், ஆண்டிபட்டி பழைய கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன் 45, திருட்டு வாகனத்திற்கு போலியான ஆவணம் பெற்று தரும் பணியையும், மதுரை ஸ்ரீராம் நகரை சேர்ந்த முத்துப்பாண்டி 49, தனது வெல்டிங் ஒர்க் ஷாப்பில் திருட்டு வாகனத்தின் எஞ்சின், சேஸ் நம்பர் ஆகியவற்றை அழித்து புதிய எண் வாகனத்தில் பதிக்கும் பணியையும், மதுரை புதூரைச் சேர்ந்த மாரிமுத்து 60, என்பவர் திருட்டு வாகனத்தின் புதிய எஞ்சின், சேஸ் நம்பர் ஆகியவற்றிற்கு அலுமினிய பிளேட் உருவாக்கி தந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார்அன்புசெல்வம், ஆனந்தன், முருகன், வேல்முருகன், முத்துப்பாண்டி, மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
ஆறு வாகனங்கள் கண்டுபிடிப்பு
டி.எஸ்.பி.,ராமலிங்கம் கூறியதாவது:
விற்பனை செய்யப்பட்ட மாருதி காரின் ஏ.சி., பகுதியில் ஜி.பி.எஸ்., கருவி இருந்துள்ளது. இதன் மூலம் கேரள எர்ணாகுளம் போலீசார் திருடப்பட்ட காரை கண்காணித்து பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் தவிர இன்னும் சிலர் கைது செய்யப்படுவர். பொதுமக்கள் இணையதளம் மூலம் வரும் விளம்பரங்களை நம்பி வாகனங்கள் வாங்குவதில் கவனமாக செயல்பட வேண்டும், என்றார்.
நடிகரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
கொடைக்கானல்: கொடைக்கானலில், நடிகர் பாபி சிம்ஹாவிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சமூக ஆர்வலர்கள் எனக்கூறி வலம் வந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாபி சிம்ஹாவிற்கு கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் உள்ளது. இதில், வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர்.
இவர்களுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணியை முடிக்க வலியுறுத்திய பாபி சிம்ஹாவை, அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களோடு கொடைக்கானலைச் சேர்ந்த உசைன், பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் சேர்ந்து மிரட்டி உள்ளனர்.
இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
குஜராத் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்
ஆனந்த்: குஜராத்தில் கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்ட விசாரணை கைதிகள் நான்கு பேர், சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தின் போர்சாத் பகுதியில் கிளைச்சிறை உள்ளது.
இங்கு, கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் நேற்று, மரம் அறுக்கும் ரம்பத்தை பயன்படுத்தி, சிறையின் இரும்பு கம்பியை அறுத்து, உயரமான சுற்றுச்சுவரில் ஏறி தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த போலீசார், தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர். சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இரு உறவினர்களை சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
சாகர்: மத்திய பிரதேசத்தில் குடும்பத் தகராறின் போது சமரசம் செய்ய முயன்ற சகோதரர் மற்றும் உறவினரை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள லாலேபூர் கிராமத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமதார் திவாரி, 50, வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி சண்டை நடந்தது.
இதையடுத்து, ராமதாரின் மூத்த சகோதரர் ராம்மிலன், 62, மற்றும் உறவினர் அஜ்ஜு, 36, இருவரும், அவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர்.
அப்போது, வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்த ராமதார் இருவரையும் சுட்டார். இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்த ராமதாரின் மகள் வர்ஷா, 24, மீதும் குண்டு பாய்ந்தது.
மூவரும் பந்தேல்கண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராம்மிலன், அஜ்ஜு இருவரும் உயிரிழந்தனர்.
காயமடைந்த வர்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தப்பி ஓடிய ராமதாரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு வயது மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
துமகூரு: தன் திருமணத்துக்கு, முட்டுக்கட்டையாக உள்ளார் என, 4 வயது மகளை கொலை செய்த தந்தைக்கு, ஆயுள் தண்டனை விதித்து துமகூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துமகூரு கொரட்டகரேவின் தன்னேனஹள்ளி அருகில் உள்ள வெங்கடாபுரா கிராமத்தில் வசிப்பவர் நரசிம்ம மூர்த்தி, 35. இவருக்கு திருமணமாகி 4 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தன் மனைவி நடத்தையில் நரசிம்மமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
யாருடனோ கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி, அவ்வப்போது தகராறு செய்தார். மனைவியை விட்டுப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
தன் திருமணத்துக்கு மகள் சிந்து, 4, முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதி, கொலை செய்யத் திட்டமிட்டார். 2018 டிசம்பர் 4ல், மகளை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசினார்.
மகளைக் காணாமல் மனைவியின் குடும்பத்தினர், கோளாலா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, நரசிம்ம மூர்த்தியே மகளைக் கொன்றது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், துமகூரு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி கீதா நேற்று தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்