புவனேஸ்வர்: அரசு கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் செலுத்தும் முழு கல்விக் கட்டணமும் திருப்பித் தரப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா மாநில எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரின் திறமையான மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் தகுதியான எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குஅவர்கள் செலுத்தும் முழு கல்விக் கட்டணமும் திருப்பித் தரப்படும். இந்த சலுகையைப் பெற அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
சேர்க்கைக் கட்டணம், இருக்கை ஏற்பு கட்டணம், கல்வி கட்டணம், விடுதி சேர்க்கைக் கட்டணம், விடுதி-உணவுக்கான கட்டணம், புத்தக செலவு, பயிற்சிக்கான செலவு உட்பட அனைத்து கட்டணமும் திருப்பித் தரப்படும். மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, இந்தக் கட்டணம் அடங்கிய பட்டியலில் கல்லூரி முதல்வரின் கையொப்பத்தைப் பெற்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் கட்டணம் முழுவதும் திருப்பித் தரப்படும்.
இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மூலம்வரும் 11-ம் தேதி மாணவர்களை அழைத்து இந்த திட்டம் பற்றி எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக நீதியைநிலைநாட்டவும் அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்விகிடைப்பதை உறுதி செய்யவும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் துணை மானிய கோரிக்கை மூலம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சில மாநிலங்கள் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை திருப்பி வழங்கினாலும், முழு கல்விக் கட்டணத்தையும் வழங்கும் முதல் மாநிலம் ஒடிசா ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.