பாட்னா: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக அணியை எதிர்கொள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இதன் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றபின் பாட்னா திரும்பிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் , நேற்று முன்னாள் முதல்வர் மறைந்த தரோகா பிரசாத் ராய் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணி சார்பில், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கலக்கம் அடைந்துள்ளது. இந்த மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையும், மக்களவை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆராய்கிறது. இது பாஜகவின் பதற்றத்தை வெளிக்காட்டுகிறது. தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என பாஜக நினைக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஏன் தாமதமாகிறது என்பது பற்றி மத்திய அரசு கூறுவதில்லை. விதிமுறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முன்பே முடிந்திருக்க வேண்டும். மற்ற செயல்களை செய்ய இந்த அரசுக்கு நேரம் உள்ளது. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு மட்டும் இந்த அரசுக்கு நேரம் இல்லை. இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.