சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றம் வரை சென்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வரை சென்றும், அவருக்குசாதகமாக தீர்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் மக்கள் மன்றமே தீர்வு எனக் கருதி, மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கும் விதமாக பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் நேற்று சந்தித்து, 1 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் சென்றார். பின்னர் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து லக்னோவில் உள்ள இந்திய ராணுவத்தின் சூர்யா கமாண்ட் பிரிவு ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவரை, தற்போது ஓபிஎஸ் சந்தித்துள்ளது மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும், அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஓபிஎஸ் இன்று தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.