நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனை புரிந்துள்ளது. முன்னதாக ரஜினியையும் அரசியலையும் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 2017ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது எனக் கூறி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதற்காக தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோரையும் நியமித்தார். ஆனாலும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். இதனிடையே ரஜினிகாந்த் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் அனைத்தும் இந்துத்துவத்திற்கு ஆதரவாக இருப்பதாக தமிழகத்து அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர. மேலும், பாஜக தலைவர்களுடன் தான் ரஜினிகாந்த் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கூட ஆன்மீக பயணமாக இமயமலைக்குச் சென்ற ரஜினிகாந்த், அதன்பிறகு வட இந்தியாவில் பாஜகவில் ஏற்கனவே இருந்து தற்போது ஆளுநர்களாக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், ஆனந்தி பென் படேல் ஆகியோரை சந்தித்தார். லக்னோவில் உத்தர பிரதேச துணை முதல்வருடன் அமர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்த்தார். அத்துடன், யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தபோது தன்னுடன் வயது இளையவரான அவரின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அடிக்கடி பாஜக தலைவர்களை ரஜினிக்கு மத்திய அரசு ஏதேனும் பதவி அளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
வந்த பாதையை மறக்காத ரஜினி..
இந்த நிலையில் மதுரையில் நடந்த ரஜினி ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த ரஜினிகாந்த் அண்ணன் சத்திய நாராயணாவிடம், ரஜினி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார். அதுபற்றிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடனான ரஜினி சந்திப்பில் அரசியல் எதுவுமில்லை” என்று கூறினார்.
ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அது கடவுளின் தயவு. ஆளுநர் பதவி குறித்து எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், ஆளுநர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம்” என்று பதிலளித்தார்.இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தற்போதே தொடங்கிவிட்டது.