சென்னை: 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி சீமான் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சீமான் மீதான வழக்கை மீண்டும் போலீஸார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார்.
பின்னர், அன்று இரவு கோயம்பேடு துணை காவல் ஆணையர் உமையாள் தலைமையிலான போலீஸார் விஜயலட்சுமியிடம் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை அடிப்படையில், 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை போலீஸார் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளனர். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.