லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் `லியோ’ அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் ‘Fanboy Moment’ என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. நடிகர் விஜய் சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் ஜூனியரின் நடிப்பில் வெளியான ‘The Equalizer 3’ படத்தைப் பார்த்துக் கொண்டாடிய புகைப்படம்தான் அது.
அப்பதிவில், “முதல்முறையாகத் தளபதி விஜய்யின் ஃபேன் பாய் மொமன்ட்டைப் புகைப்படம் எடுத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகிய வண்ணமிருக்கிறது.
இதையடுத்து பலரும், ‘நடிகர் விஜய் ரசித்துக் கொண்டாடும் அந்த ஹாலிவுட் நடிகர் யார்’ என்று இணையதளங்களில் தேடத் தொடங்கியுள்ளனர். அதுவும் குறிப்பாக, கூகுளில் நேற்று மட்டும் (செப்டம்பர் 2ம் தேதி) தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானோர் ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் ஜூனியர் பற்றித் தேடியுள்ளனர். இதனால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் டென்சில். விஜய்யின் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவர் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். இது தொடர்பான புகைப்படங்களும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.