`கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிக்கொண்டிக்கும் படம் `சலார் -1: சீஸ் ஃபையர்’.
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெகுத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் ஜெகபதி பாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் கை கோர்த்துள்ளது. ‘கே.ஜி.எஃப்’யைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கமாக இருக்கிறது. இதற்காகக் கடும் உழைப்பைப் போட்டுப் படத்தை உருவாக்கி வருகின்றனர். ரசிகர்களும் இப்படத்தின் வெளியீட்டிற்காக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதுதான் படக்குழுவினரின் திட்டமாக இருந்தது. இதற்காக இதன் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “அவசர அவசரமாக எதையும் செய்யவேண்டாம், தாமதமானாலும் பரவாயில்லை. படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. ‘VFX’, திரைக்கதை, மேக்கிங் உட்பட சின்னச் சின்ன விஷயங்கள் கூட தரமாக இருக்க வேண்டும்” என்று உறுதியாகக் கூறிவிட்டாராம் இயக்குநர் பிரசாந்த் நீல். இதன் காரணமாக இந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி என்று திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு தீபாவளிக்குத் தள்ளி வைக்கப்படவுள்ளது. அப்போதும் படம் ரெடியாக விட்டால் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தானாம். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும்.