நியூயார்க் : அமெரிக்காவில், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடி செல்வது அதிகரித்து வருவதை அடுத்து பற்பசை, சாக்லெட், சலவை சோப்பு துாள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை கண்ணாடிக்கு பின் பூட்டி வைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்காவில் ‘வால்மார்ட், டார்கெட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் பிரமாண்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன. பல லட்சம் சதுர அடி பரப்பளவில் நடத்தப்படும் இந்த கடைகளில் அனைத்து விதமான பொருட்களும் கிடக்கின்றன.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து பார்த்து, பல்வேறு நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிட்டு வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால் அமெரிக்காவில் சமீப காலமாக இதுபோன்ற அங்காடிகளில் பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இவற்றை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் இந்த திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க துவங்கின. பொருட்கள் வாங்குவது போல வந்து தங்களுக்கு தேவையானவற்றை பைகளில் பலர் அள்ளி செல்ல துவங்கினர்.
பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினால் அவர்களை தாக்கி விட்டு செல்வதும் அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக சிறிய அளவிலான வீட்டு உபயோக பொருட்கள் திருடு போவது அதிகரித்தது.
இது ‘வால்மார்ட்’ போன்ற பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்த துவங்கியது. இதையடுத்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வைத்துள்ள ‘ஷெல்ப்’களில் கண்ணாடி கதவுகள் அமைத்து அவற்றை பூட்டி வைக்க துவங்கி உள்ளனர்.
அந்த கண்ணாடி கதவுக்கு மேல்பகுதியில் விற்பனையாளர்களை உதவிக்கு அழைக்க அழைப்பு மணியும் வைக்கப்பட்டுள்ளன. அதை அழுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனையாளர்கள் எடுத்து காட்டிவிட்டு மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுகின்றனர்.
குறிப்பாக, பற்பசை, சாக்லெட், சலவை சோப்பு துாள், வாசனை திரவியங்கள், மருந்துகள், காலணிகள் போன்ற பொருட்கள் கண்ணாடி கதவுகளுக்கு பின் பூட்டி வைக்கப்படுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement