டெல்லி:
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது ‘இந்தியா’ கூட்டணியிலும் மிகப்பெரிய பிளவை உருவாக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொடர் முயற்சியால் உருவான ‘இந்தியா’ கூட்டணி, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினால் உடைந்து விடுமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தனது பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சை ஆகும் என உதயநிதியே எதிர்பார்த்திருக்க மாட்டார். சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தமிழ்நாட்டில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏனெனில், தமிழ்நாட்டில் சனாதனம் என்பது ஜாதி படிநிலைகளையும், வர்ணங்களையும ஏற்படுத்திய ஒரு கோட்பாடு என்பது தான் இங்கு காலம் காலமாக கற்பிக்கப்பட்டு வரும் விஷயம்.
கொந்தளிக்கு வட மாநிலம்:
ஆனால், தமிழ்நாட்டை கொஞ்சம் தாண்டி மகாராஷ்டிராவுக்கு சென்றால் கூட சனாதனம் என்றால் இந்து மதம் என்றுதான் பொருள். இதுதான் உதயநிதிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்து மதத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அதை ஒழிக்கவும் வேண்டும் என்று ஒரு அரசியல் தலைவர் கூறுகிறாரா என்று வட மாநிலங்களில் உள்ள இந்து மக்கள் கொதித்து போய் உள்ளனர். இதனை பாஜகவினர் அப்படியே தனக்கு சாதகமாக்கி விட்டனர்.
“உதயநிதி ஒரு ஜூனியர்”.. சனாதனம் பற்றி அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது.. மம்தா பானர்ஜி ‘நறுக்’
பகிரங்கமாக கண்டித்த மம்தா:
இதனால்தான், உதயநிதி ஸ்டாலினின் கருத்தை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸை தவிர வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை. பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் ஆம் ஆத்மி கூட உதயநிதியின் கருத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பின்வாங்கிவிட்டது. அதற்கு ஒருபடி மேலே சென்ற மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதி என்றும், சனாதனம் பற்றி அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா போட்ட ஸ்கெட்ச்:
தற்போது இந்த விஷயத்தை வைத்துதான் பாஜக அரசியல் செய்யப் போகிறது. ஏற்கனவே அமித் ஷா அதனை ஆரம்பித்து வைத்துவிட்டார். நேற்று பேசிய அமித் ஷா, “பார்த்தீர்களா, இந்து மதத்தினரை படுகொலை செய்ய வேண்டும் என ‘இந்தியா’ கூட்டணி கூறுகிறது. இந்து மதத்தினரை ஒழிப்பதுதான் ‘இந்தியா’ கூட்டணியின் நோக்கம் என்பது இப்போது தெரிந்துவிட்டது” எனக் கூறி பெரும்பாலான இந்து மக்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திருப்பிவிட்டு விட்டார் அமித் ஷா.
உதயநிதிக்கு அழுத்தம்:
அதே சமயத்தில், உதயநிதி ஸ்டாலினோ பிரச்சினையின் வீரியத்தை உணராமல், “சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான். பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் பேசினேன். இன்னும் அப்படித்தான் பேசுவேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்” என நேற்றும் பேசி பாஜகவின் வேலையை மிகவும் சுலபமாக்கி விட்டிருக்கிறார். இப்போது என்ன நடக்கும்..? உதயநிதியை தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறுவார்கள். ஆனால் இத்தனை உறுதியாக பேசிவிட்டு உதயநிதி நிச்சயம் மன்னிப்பு கேட்க மாட்டார்.
கூட்டணி நீடிக்குமா?
இதனால் இந்த விவகாரத்தை பாஜக இன்னும் பெரியதாக்கும். இந்து மக்களுக்கு எதிராக பேசிய திமுகவுடன் கூட்டணியில் இருப்பவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான் என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்தும். இதனால் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க, உதயநிதியின் பேச்சை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கண்டிக்க வேண்டிய சூழல் வரும். இல்லையெனில் உதயநிதியை மன்னிப்பு கோரும்படி அவை நிர்பந்திக்கும். உதயநிதியை காங்கிரஸ் ஆதரித்துவிட்டதால் இனி அக்கட்சியால் ஒன்றும் சொல்ல முடியாது. இதுவே கூட்டணிக் கட்சிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிளவு கூட ஏற்படும் சூழல் வரலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.