இசையமைப்பாளர் தஷி கார் விபத்தில் பலி

தமிழில் 'சேஸிங்', ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் தஷி என்கிற சிவகுமார். ஏராளமான மலையாள படங்களுக்கு பின்னணி மற்றும் சிறப்பு இசை அமைத்துள்ளார். இதற்காக கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

தஷி தனது நண்பர்களுடன் காரில் கேரளா சென்று விட்டு நேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். 12 மணியளவில் திருப்பூர் மவட்டம் அவிநாசி அருகே பழங்கரை வேலூர் பிரிவு அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் தமிழடியான், முன்சீட்டில் அமர்ந்து பயணித்த தஷி ஆகியேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற இரு நண்பர்கள் படுகாயமடைந்தார்கள்.

50 வயதான தஷி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாக்குடியை சேர்ந்தவர். 'மியூசிக் மார்க்கர்' பணியை 2000 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். 'தந்தாரா' என்ற மலையாள படத்திற்கு இசை அமைத்து சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில விருதை பெற்றார். 'அச்சன்டே பொன்னுமக்கள்', மோகன்லால் நடித்த 'பகவான்', 'கோபாலபுரம்', 'வெள்ளியங்காடி', 'குண்டாஸ்', 'டர்னிங் பாய்ண்ட்' என 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதுவரை 2400 பக்தி ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

கருவறை, தீ விலங்கு, பயணங்கள் தொடரும், காதல் தோழி, சங்கர் ஊர் ராஜபாளையம், சக்ரவர்த்தி திருமகன், ஒத்த வீடு, என் பெயர் குமாரசாமி, ஒளடதம், அலையாத்தி காடு, அஸ்திரம், பாதசாரிகள், கல் பாலம், நுகம், பயம், நீதான் ராஜா, படை சூழ வா, நானாக நானில்லை, அபூர்வ மகான் உள்ளிட்டவை தஷி இசை அமைத்த தமிழ் படங்கள் ஆகும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.