புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் மும்பையில் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டம் போபால் நகரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மும்பையில் நடைபெற்ற கூட்டம் நிறைவடைந்த போது ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இந்த கூட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இதோடு சேர்த்து தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சார பேரணி செல்லவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அடுத்த கூட்டத்தை தலைநகர் டெல்லியில் நடத்துவது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது என இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தீர்மானம் போட்டுள்ளன. 13 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவும் மும்பை கூட்டத்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.