திருநெல்வேலி டவுன், பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் பெயர் மாயாண்டி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இந்து முன்னணியின் நெல்லை வடக்கு நகரத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான ஆட்டோவை வெள்ளிக்கிழமை இரவு (01.09.23) திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே நிறுத்தி வைத்திருந்திருக்கிறார் மாயாண்டி.
மறுநாள் 02.09.23 அன்று காலையில் ஆட்டோவை எடுக்கச் சென்று பார்த்தபோது, ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை வீசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், இருக்கையிலும் மனிதக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததால் அதிர்ந்துபோன அவர், உடனடியாக திருநெல்வேலி டவுன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு விரைந்த போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்டத் தலைவரான இசக்கி ராஜா என்பவரின் மகன் நாராயணன் கார்த்திக் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக மாயாண்டிக்கும், நாராயணன் கார்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.
மாயாண்டி தொடர்ந்து 4 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு, சிலை வைத்துக் கொண்டாடி வந்திருக்கிறார். இந்த நிலையில், அதே இடத்தில் இந்த ஆண்டு சிலை வைக்க நாராயணன் கார்த்திக், மாயாண்டியிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், மாயாண்டி அதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மாயாண்டியை அவமானப்படுத்தும் வகையில் நாராயணன் கார்த்திக் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கைதுசெய்யப்பட்டிருக்கும் நாராயணன் கார்த்திக், அகில பாரத இந்து மகா சபையின் நெல்லை மாநகர இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரையும் போலீஸார் தேடி வருவதாகத் தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY