இந்தியாவில் விரைவில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பே வெளியான தகவல்களில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதில் திலக் வர்மா உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு தான் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அதில் அவர் எதிர்பார்த்தளவுக்கு விளையாடாததால் உடனே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகிறார். மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது சஞ்சு சாம்சனுக்கு சீராக வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இதுவே பெரிய விமர்சனமாக வைக்கப்படும் நிலையில், எதிர்வரும் உலக கோப்பைக்கான அணியிலும் அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் இனி தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனென்றால், உலக கோப்பைக்குப் பிறகு சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அவரது இடத்துக்கு திலக் வர்மா உள்ளிட்டோர் போட்டியாக இருப்பார்கள். அம்பத்தி ராயுடுவுக்கும் இதே நிலை தான் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டது பெரும் அதிருப்தியாக வெடித்தது. அப்போது உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியானதுமே விரக்தியை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு, ஓய்வு முடிவையும் அறிவித்தார். பின்னர் அதனை திரும்ப பெற்றது என்பது வேறு கதை. இப்போது இதே நிலை சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரின் முடிவை கிரிக்கெட் வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் 10 வெவ்வேறு மைதானங்களில் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடைபெறுகிறது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார். மற்ற வீரர்களைப் பொறுத்தவரை ஷுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது பும்ரா சிராஜ், அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன.