உதயநிதிக்கு அமித் ஷா எதிர்ப்பு.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.. சட்டென சொன்ன திருமாவளவன்

சென்னை:
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியற்கு அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தையும், அதன் கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். மலேரியா, டெங்குவை போல சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

சனாதனம் என்றால் இந்து மதம் என்றும் ஒரு அர்த்தம் இருப்பதால், இந்துக்களை படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள இந்து அமைப்புகளும் உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதியின் பேச்சை கண்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று பேசியதால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாக மாறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் கலந்து கொண்டு பேசினேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அந்த மாநாட்டில் உரையாற்றினார். சனாதனத்தை ஒழிப்பது நாட்டின் இன்றியமையாத தேவை என்றும், எப்படி தொற்று நோய்களை ஒழிக்க வேண்டுமோ அதேபேோல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அவர் பேசினார். இப்படி அவர் பேசியதை இன்றைக்கு அகில இந்திய பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவே உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கிறார். இது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை ஒரு கோட்பாட்டை எதிர்ப்பதற்கு அர்த்தம் ஆகும். ஆனால் அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிரானது என்பது போன்ற பிம்பத்தை பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது. சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது என்பதால்தான் அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என திருமாவளவன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.