புதுடெல்லி: அனைத்துக் கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை சொல்லும் உரிமை உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “அவர்கள் சனாதன தர்மத்தை தாக்குகிறார்கள். சனாதன தர்மத்தை திமுக தாக்குகிறது. ஆனால், காங்கிரஸ் அமைதி காக்கிறது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை?
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்கள்? சனாதன தர்மம் என்பது வெறும் பிரார்த்தனைக்கானது மட்டுமானது அல்ல. உலகமே ஒரு குடும்பம் என்ற செய்தியை தருவது சனாதன தர்மம். திமுக தலைவர் என்ன பேசினாரோ, அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவரது பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு அவர்களை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநில அமைச்சரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, “சமத்துவத்தை வளர்க்காத அல்லது மனிதனாக இருப்பதற்கான மரியாதையை உறுதி செய்யாத எந்த மதமும் என்னைப் பொறுத்தவரை மதம் அல்ல” என்று கூறியுள்ளார். உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், “அது அவரது தனிப்பட்ட கருத்து. அதில், எனக்கு உடன்பாடு இல்லை” என தெரிவித்துள்ளார்.