"உதயநிதி ஒரு ஜூனியர்".. சனாதனம் பற்றி அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது.. மம்தா பானர்ஜி 'நறுக்'

கொல்கத்தா:
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியிலும அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அதாவது, “டெங்கு, மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது. அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.

இந்த சூழலில், உதயநிதி இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் என வட மாநிலங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. அப்படியென்றால், சனாதனத்தை ஒழிப்பது என்பது இந்து மதத்தினரை ஒழிப்பது என்றுதானே பொருள் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உதயநிதி தலைக்கு பரிசு:
இந்தியாவில் இருந்து கொண்டே இந்து மதத்தினரை படுகொலை செய்ய வேண்டும் என்று கூறுவதா என பாஜக தலைவர்கள் கடுமையான சொற்களை பயன்படுத்தி உதயநிதியை திட்டி வருகிறார்கள். அவருக்கு எதிராக டெல்லி போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உபியை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி பரிசு தரப்படும் என அறிவித்துள்ளார்.

“சிலருக்காக பலரை புண்படுத்தி வருகிறீர்கள்”.. போதும் நிறுத்திக்கோங்க.. காட்டமாக பேசிய தமிழிசை

காட்டமாக பேசிய மம்தா:
இவ்வாறு நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஒதுங்கிக் கொண்டன. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இதுதொடர்பாக சற்று காட்டமாகவே கருத்து கூறியுள்ளார்.

நெல்லை பாஜக நிர்வாகி கொலை.. கண்கலங்கிவிட்டு ஆவேசமான அண்ணாமலை.. திரும்பி பார்த்த திமுக!

சனாதனத்தை மதிக்கிறேன்:
“நான் தமிழ் மக்களையும், ஒட்டுமொத்த தென் மாநில மக்களையும், மு.க. ஸ்டாலினையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நான் வைக்கிறேன். இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

ஜூனியர் அரசியல்வாதி:
பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும். உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்ற அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.