'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' – வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய அயோத்தி சாமியாரால் பரபரப்பு

அயோத்தி,

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் , உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்துள்ளார்.

மேலும், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அந்த புகைப்படத்தை எரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தான் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைய போவதாக விளம்பரம் செய்து பின்னர் பின்வாங்கிய விளம்பர பிரிய சாமியார் என்பது குறிப்பிடதக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக ராமர் குறித்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் தலையை சீவி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஷுவ ஹிந்து பரிஷத் தலைவர் பேசியது சர்ச்சையானது.

இதுதொடர்பாக கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, எனது தலையை நானே சீவ முடியவில்லை என தனக்கு வழுக்கை விழுந்துள்ளதை நகைச்சுவையாக குறிப்பிட்டு அதற்கு பதில் தந்தார் கருணாநிதி. அதே வகையிலான சர்ச்சை கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.