வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட,’ எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளை ‘வாபஸ்’ பெறும்படி, திரும்ப அம்மாநில அரசுக்கு இந்திய ‘பிரஸ் கிளப்’ வலியுறுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே, மே, 3ல் மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து பல மாதங்களுக்கு நீடித்த வன்முறை சம்பவங்கள், தற்போது தணிந்திருந்தாலும், பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில் மணிப்பூரில் இன கலவரங்கள் ஒரு தலைப்பட்சமாக நடந்ததாகவும், மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசும் இந்த விவகாரத்தில் பாகுபாடு காட்டி வருவதாகவும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு முதல்வர் பைரேன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மணிப்பூரில் நடந்த இன கலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டனர்.இது, இங்கு கலவரங்களை உருவாக்கும் முயற்சிகளை அரங்கேற்றும். எனவே, ‘எடிட்டர்ஸ் கில்டு’ அமைப்பின் தலைவர் சீமா முஸ்தபா, குஹா, பரத் பூஷண், சஞ்சய் கபூர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என, ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ மணிப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயலில் மாநில அரசு ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement