நீலகிரி:
“விஜயலட்சுமி என் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை பற்றி என் மனைவியே கவலைப்படல.. நீங்க ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க” என்று நிருபர்களை பார்த்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஏற்கனவே பல ஆண்டுகளாக இதே குற்றச்சாட்டை வீடியோக்கள் மூலம் கூறி வந்த விஜயலட்சுமி, நேரடியாக புகார் அளித்திருப்பதால் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.
இந்த சூழலில், நேற்று இரவு சீமான் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. ஊட்டியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமானை தேடி தனிப்படை போலீஸார் சென்றதாகவும், அதனால் இரவே அவர் கைது செய்யப்படலாம் எனவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், விஜயலட்சுமி பேசியது குறித்து நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பியதால் சீமான் கடும் கோபமடைந்தார். அவர் கூறுகையில், “எதுக்கு நீங்க இந்த கேள்வியை கேக்குறீங்க. நீங்க யார் முதல்ல.. கேள்விகளை தான் கேட்கணும். கேவலங்களை கிளறக் கூடாது. யாராவது ஏதாவது பேசுனா உடனே கேள்வி கேட்க வந்துறீங்க. என்னுடன் திருமணம் ஆனதற்கு இதுவரை ஏதாவது ஆதாரத்தை அவங்க காட்டி இருக்காங்களா? அப்புறம் எதுக்கு அவங்கள பத்தி என்ட்ட கேக்குறீங்க.
இந்த விஷயத்தை பேசி என் மனைவி கவலைப்படல.. என் பிள்ளைகள் கவலைப்படல.. என் தம்பி தங்கைகள் கவலைப்படல. நீங்க தான் (நிருபர்கள்) ரொம்ப கவலைப்படுறீங்க. என் மீது உங்களுக்கு எல்லாம் எவ்வளவு வன்மமும், அருவருப்பும் இருக்கிறது என்பது நல்லா தெரியுது” என்றார் சீமான்.