புவனேஸ்வர் ஒடிசாவில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், எட்டு மாவட்டங்களில் மின்னல் தாக்கி, 12 பேர் பலியாகினர்; 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவில் புவனேஸ்வர், கட்டாக் உட்பட கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புவனேஸ்வரில் நேற்று முன்தினம் ஒன்றரை மணி நேரத்தில் மட்டும் 12.6 செ.மீ., மழை பதிவானது.
இதற்கிடையே குர்தா மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் நான்கு பேரும், போலங்கீர் பகுதியில் இரண்டு பேரும், ஆங்குல், ஜகதீஷ்ங்பூர், கஜபதி, புரி, போத், தேன்கனல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல், 11 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒடிசா அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், அடுத்த, 48 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில், அந்த சமயங்களில் பாதுகாப்பான இடங்களில் பொது மக்கள் தஞ்சமடைய வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement