சந்திரமுகி 2: "சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டாரா?"- ராகவா லாரன்ஸ் பளிச் கேள்வி

செப்டம்பர் 15-ம் தேதி `சந்திரமுகி – 2′ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்திருந்தது. இந்நிலையில் நேற்று `சந்திரமுகி – 2′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்திருந்தது.

பி.வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், மகிமா நம்பியார் என படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் பி.வாசு, “சந்திரமுகி முதல் பாகம் வெளியான அப்போ அந்தப் படம் எதைப் பற்றியதுனு மக்களுக்கு ஐடியாவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது

சந்திரமுகி 2

இரண்டாம் பாகமும் அப்படி இருக்குமா இப்படி இருக்குமா என எந்த எதிர்பார்ப்போடும் வராதீர்கள். எதிர்பார்ப்பே இல்லாமல் வாருங்கள். படம் உங்களைக் கட்டாயம் திருப்திப்படுத்தும்.

நான் இயக்கிய படங்களில் குரூப் டான்ஸராக நான்காவது வரிசையில் நின்று ஆடியதாக லாரன்ஸ் கூறியிருக்கிறார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி என்னுடைய படத்திலேயே மாஸ்டராகப் பணியாற்றினார். இப்போது ‘சந்திரமுகி – 2’ விலும் அசத்தியிருக்கிறார். தியேட்டரை விட்டு வெளியே வரும் மக்கள் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பைத்தான் பாராட்டுவார்கள். அதன்பிறகு, கங்கனா ரணாவத், அவரும் அசத்தியிருக்கிறார். அவருக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கும்” என்றார்.

சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்படும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை பற்றிப் பேசிய பி.வாசு,

ரஜினி

“சூப்பர் ஸ்டாரோட யாரையும் ஒப்பிடாதீங்க. விஜய், அஜித்னு எல்லாருக்கும் அவங்க அவங்க உழைப்புக்கு ஏத்த இடத்தை மக்கள் கொடுத்துருக்காங்க. பட்டமெல்லாம் மக்கள் கொடுப்பாங்க. அதனால இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்த இத்தோட விட்றலாம்!” என்றார்.

ராகவா லாரன்ஸூம் ‘சூப்பர் ஸ்டார்’ சர்ச்சையிலிருந்தே பேச்சைத் தொடங்கினார்.

“சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் சார் கேட்டாரா? நான் எப்போ விஜய் சாரைப் பார்த்தாலும் ‘தலைவர் எப்படி இருக்காரு’ன்னுதான் அவர் கேட்பாரு. அதேமாதிரி ரஜினி சாரை பார்க்கும் போது ‘பீஸ்ட் பரவால்லன்னு’ சொன்னேன். அதுக்கு ரஜினி சார், ‘இல்லப்பா கலெக்சன்லாம் செமய்யா இருக்குதான், சன் பிக்சர்ஸ் சொன்னாங்கன்னு சொன்னாரு. இதுதான் அவங்க. தேங்காய் மரம் தேங்காய்தான் காய்க்கும். மாமரம் மாங்காய்தான் காய்க்கும்!” என்றார்.

சந்திரமுகி 2

படத்தைப் பற்றி பேசிய லாரன்ஸ், “என்னோட அண்ணன், என்னோட குரு ரஜினிகாந்த், இயக்குநர் வாசு, சிவாஜி புரொடக்சன்ஸ் இவங்க எல்லாம்தான் இந்த ‘சந்திரமுகி – 2’ உருவானதற்குக் காரணம். எனக்குள்ள இருக்குற சூப்பர் ஸ்டார் தாக்கத்த வெளிய எடுத்து போட்டுட்டு வேற மாதிரி பெர்ஃபார்ம் பண்ண வைக்குறதுதான் வாசு சாருக்குப் பெரிய டாஸ்க்கா இருந்துச்சு. கங்கனா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே துப்பாக்கி ஏந்திய காவலர்களோடதான் வருவாங்க. ஏற்கெனவே பாம்பேல அவங்கள பெரிய டெரர்னு வேற பேசிக்கிறாங்க. 4 தேசிய விருது வேற வாங்கியிருக்காங்க. அதனால முதல் நாள் அவங்கக்கிட்ட பேசவே பயமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாள்லயே நல்ல பழக ஆரம்பிச்சுட்டாங்க. கடைசில அவங்கள கங்குன்னு பட்டப்பெயர் வச்சே கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்!” என்றார்.

கங்கனா ரணாவத் பேசுகையில், “பி.வாசு சார் என்னோட குரு மாதிரி. ‘சந்திரமுகி’ங்றது ரொம்பப் பெரிய படம். அதுல நானும் இருந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தோட ஹிந்தி வெர்சனுக்கு நான்தான் டப்பிங் பண்ணேன். பல சீன்கள்ல பேய் மாதிரி கத்தி வசனம் பேசனும். டப்பிங் முடிச்சப்ப தொண்டையெல்லாம் பயங்கரமாக வலிச்சது. அதனால எனக்குக் காய்ச்சலே வந்துருச்சு. தமிழ்ல இது எனக்கு மூணாவது படம். சென்னை நல்லா இருக்கு. சென்னையோட உணவுகள் எனக்குப் பிடிக்கும். ரசம் என்னோட ஃபேவரைட். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளும் பிடிக்கும்!” என்றார் கங்கனா ரணாவத்.

கங்கனா ரணாவத்

விழாவில் `சந்திரமுகி – 2′ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தற்போது அந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.