சென்னையில் நேற்று முன்தினம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” என்று பேசியிருந்தார். உதயநிதியின் இத்தகைய பேச்சு, பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.
இதன் காரணமாக பா.ஜ.க தரப்பு தொடர்ந்து, உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் போலீஸில் புகாரளிக்கப்படும் என்று கூறிவருகிறது. இந்த நிலையில், சனாதனம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதை ஒட்டுமொத்த இந்துக்களையே எதிர்ப்பதாக பா.ஜ.க திரிபுபடுத்துகிறது என வி.சி.க தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றிப் பேசிய திருமாவளவன், “சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை, தொற்றுநோயைப்போல இதையும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதை, இன்றைக்கு அகில இந்திய அளவில் ஒரு பிரச்னையாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களே பேசும் நிலை உருவாகியிருக்கிறது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, கோட்பாட்டை எதிர்த்துப் பேசுகிற ஒன்றாகும்.
ஆனால், அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பதைப்போல ஒரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது. சனாதனம் சமத்துவத்துக்கு எதிரானது என்பதால்தான் அது விமர்சனத்துக்குள்ளாகிறது என்பதை அமைச்சர்களே புரிந்து கொள்ளாமல் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக விமர்சனம் செய்வது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. சனாதனம் எந்த இடத்திலும் சமத்துவத்தைப் போதிக்கவில்லை. எனவே அவர்கள் நீதிமன்றத்துக்கு வரட்டும் இதனை விவாதிப்போம்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா என்பதுதான் பிரச்னை. வேண்டாம் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
`ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும், அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும். எதேச்சதிகாரமான போக்கு தலை தூக்குவதற்கு இடம் கொடுக்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும். எனவேதான் இதனை வேண்டாம் என்று சொல்கிறோம். அ.தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை. பா.ஜ.க எந்த முடிவு எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்கிற நெருக்கடிக்கு அந்தக் கட்சியினர் ஆளாகியிருக்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY