”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும் புண்படுத்தவில்லை!” – அமைச்சர் அன்பில் மகேஸ்

“சனாதனத்தில் சில கோட்பாடுகள் வைத்திருக்கின்றனர். சம தர்மமோ, சம நீதியோ இல்லாதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் உதயநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை” என தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

அன்பில் மகேஸ்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ, மகளிர் சுய உதவிக்குழு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தேன். அப்போது மாணவ, மாணவிகளிடம் காலை உணவுத் திட்டம் குறித்து கேட்டதற்கு, காலை உணவுத் திட்டத்துக்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

குழந்தைகளிடமிருந்து உணர்வுபூர்வமாக வரக்கூடிய இந்த வார்த்தைகளைத்தான் இந்தத் திட்டத்துக்கான மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம். ஒரு வாரத்துக்கு முன்பு தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்தத் திட்டத்தை எங்களது முதல்வரும் செயல்படுத்தவிருப்பதாக அந்த மாநில உயர்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் காலை உணவு திட்டச் செயல்பாடுகளை தெலங்கானா மாநில அலுவலர்கள் பார்வையிட்டனர். மிக விரைவில் தெலங்கானாவிலும் இந்தத் திட்டத்தை தொடங்கவிருப்பதாக அவர்கள் கூறியது இந்தத் திட்டத்துக்கான மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.

தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் அன்பில் மகேஸ்

சம்பா சாகுபடி குறித்து வேளாண்துறை ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசியுள்ளோம். அவர்களும் மிக விரைவில் வேளாண்துறை உயர் அலுவலர்கள் கூட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். அதன் மூலம் நமக்கு நல்ல ஒரு விடிவு கிடைக்கும். நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். அவர்கள் சில கோட்பாடுகள் வைத்துள்ளனர். சம தர்மமோ, சம நீதியோ இல்லாததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கோட்பாட்டைத்தான் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.