சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஜாமீன் பெறவில்லை.
ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 120 பக்க அளவிலாக குற்றப்பத்திரிக்கை மற்றும் சுமார் 3000 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் நகலும் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜி தரப்பு எம்.எல்.ஏ., எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தது.
ஜாமீன் மனு மீதான விசாரணையை வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியோ வழக்கை மீண்டும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை தாங்கள் விசாரிக்க முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்டுவர உத்தரவிட்டது.
மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சோ்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி சோதனை
செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகிய போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுக உத்தரவிடப்பட்டது. ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதிலேயே செந்தில் பாலாஜி தரப்பு அலைக்கழிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொள்ள உத்தரவிட்டது.
“சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி முதன்மை நீதிமன்றமே சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய ஆணையை திரும்பப் பெற வேண்டும். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.