பீஜிங்: இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்குப் பதிலாக பிரதமர் லி கியாங் தலைமையிலான குழு கலந்துகொள்ளும் என்று அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீனப் பிரதமர் லி கியாங் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாததற்காக காரணம் பற்றி பீஜிங் தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 2023-ல் சீனப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் லி கியாங் இந்தியா வருவது இதுவே முதன்முறையாகும். ஷாங்காய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான லி கியாங் அதிபர் ஜி ஜின்பிங்கின் தீவிர விசுவாசி என்பதும் சீன அரசியலின் நம்பர் 2 என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஜி20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரவ் பங்கேற்பார் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. இதனிடையே, சீனா இந்த மாநாட்டில் எனச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்குக்குப் பதிலாக பிரதமர் லி கியாங் தலைமையிலான குழுவினர் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜி ஜின்பிங் வராதது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிருப்தி தெரிவித்திருந்தார்.