‘நீங்க 100 கிராம் தங்கத்தை முதலீடு செஞ்சீங்கன்னா, வருச கடைசியில் 105 கிராம் கிடைக்கும். இதைய 10 வருசத்துக்கு தொடர்ந்து பண்ணீங்கன்னா, 26 கிராம் எக்ஸ்ட்ரா தங்கம் கிடைச்சிருக்கும். அப்போ ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? யோசிச்சு பாருங்க’ என்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
இந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பது ‘கோல்ட் லீசிங்’ முறை. இதெல்லாம் உண்மைதானா என்றுதானே கேட்கிறீர்கள்? இது முற்றிலும் உண்மைதான். கோல்ட் லீசிங் என்றால் உங்களிடம் இருக்கும் உலோக தங்கம் அல்லது டிஜிட்டல் தங்கத்தை லீசுக்கு விடுவது ஆகும்.
உதாரணமாக, நீங்கள் 10 கிராம் தங்கத்தை ஒரு நகை வியாபாரியிடம் லீசுக்கு கொடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர் அந்த தங்கத்தை தனது வியாபாரத்திற்கு பயன்படுத்துவார். இப்படி பயன்படுத்தப்படும் தங்கத்திற்கு அதன் அளவிற்கேற்ப மாதா மாதம் சில கிராம் தங்கம் வட்டியாக வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நீங்கள் கொடுத்த 10 கிராம் தங்கத்துடன், சில கிராம் தங்கமும் ஏறியிருக்கும். இந்த தங்கத்தை நீங்கள் மீண்டும் லீசுக்கு விடலாம் அல்லது நீங்களே வைத்துக்கொள்ளலாம்.
‘இந்த டீல் நல்லாயிருக்கே’ என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ். இதில் இருக்கும் ரிஸ்க்குகளை பற்றி விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்…
‘கோல்ட் லீசிங் என்பது முழுக்க முழுக்க பிரைவேட் ஆப்கள் மூலம் முதலீடு செய்யும் முறை ஆகும். இந்த முறையை செபி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை. மேலும் கோல்ட் லீசிங்கை முறையாக கண்காணிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவோரும் யாரும் இல்லை. இதனால் இதில் வருமானம் அதிகம் இருந்தாலும், ரிஸ்க் அதை விட அதிகம்.
பொதுவாகவே நாம் டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்களை படித்து பார்க்காமல் ‘ஒப்புதல் (agree) ‘ கொடுத்துவிடுவோம். ஆனால் அதை கண்காணிக்க செபி போன்ற அமைப்புகள் இருக்கும். ஆனால் அதே நடைமுறையை கோல்ட் லீசிங்கில் செயல்படுத்தும்போது ரிஸ்க் மிக மிக அதிகம்.
கோல்ட் லீசிங்கில் முதலீடு செய்யும்போது வருமானம் அதிகம் கிடைக்கும். ஆனால் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. முதலீடு செய்து எந்தவொரு வருமானமும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்பவர்கள் தாராளமாக கோல்ட் லீசிங்கில் முதலீடு செய்யலாம்” என்று கூறுகிறார்.