வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ”தமிழர்கள் சிக்கல்களைத் தீர்ப்பதில் வல்லவர்கள்,” என, சீன பெண் இலக்கியா கூறினார்.
சீனாவைச் சேர்ந்தவர் சுங்விங் எனும் இலக்கியா. இவர், ‘நமது வாழ்க்கை’ என்ற பக்கத்தின் வாயிலாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சீனா – தமிழகத்தை பற்றிய காட்சிகளை தமிழில் பேசி வெளியிடுகிறார்.
இவர் பேசும் தமிழுக்கு உலகத் தமிழர்கள் ரசிகர்களாக உள்ளனர். சென்னை வந்த அவர் இன்று ரசிகர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
அவர் கூறியதாவது: நான், சீனாவின் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலையில், 2009ல் தமிழ் மொழியை தேர்வு செய்து படித்தேன். அப்போது, தமிழ், உலகின் செம்மொழிகளில் ஒன்று என்பது மட்டுமே தெரியும். படிப்புக்கான நான்காண்டுகளை கடப்பதே மிகவும் கடினமாக இருந்தது.
தமிழ் மொழியில் ஒவ்வொரு பொருளுக்கும் நிறைய வார்த்தைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நுணுக்கமானவை. கல்வி முறையில் தமிழில் தேர்ச்சியடைந்தாலும், தமிழகத்தில் உள்ள பல்கலையில் படித்தால் தான், பேச்சு தமிழை கற்க முடியும் என்பதால், கோவை பாரதியார் பல்கலையில் 2013ல் டிப்ளமோ தமிழ் படித்தேன்.
ஒன்பது மாதங்கள் தமிழ் படித்த பின், எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தமிழ் மொழி, சீன மொழியை போலவே மிகவும் தொன்மையானது. இந்தியாவில் தொன்மையான கலைகளை கொண்டதாகவும், நீண்ட பாரம்பரிய மரபு கொண்டதாகவும் தமிழ் உள்ளது. சீன மொழியை போலவே, தற்போதும் உயிர்ப்புடன் உள்ளது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாசகம் ஆழமாக உள்ளது. அதனால், தமிழகம் என் இரண்டாம் ஊர் போன்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. சீனர்களை் போலவே, தமிழர்களும் சுறுசுறுப்பானவர்கள. சிக்கல்களை சமாளிப்பதிலும், தீர்ப்பதிலும் வல்லவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement