தம்பியைத் தொடர்ந்து மகன், மருமகனின் கட்சி பொறுப்புகள் பறிப்பு! – அமைச்சர் மஸ்தானுக்கு சிக்கலா?

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய மகன் மொக்தியார் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும்; மருமகன் ரிஸ்வான் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில், கட்சிப் பொறுப்புகள் நியமனம் தொடர்பாகவும், உள்ளாட்சி மற்றும் நகரமன்றத் தேர்தலில் தொண்டர்களுக்கு சீட் வழங்கியது தொடர்பாகவும் அமைச்சர் மஸ்தான் மீது கட்சியின் நிர்வாகிகளிடையே சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன.

செஞ்சி மஸ்தான்

இதுமட்டுமன்றி, மரக்காணம் கள்ளச்சாரய சம்பவ சர்ச்சை, உட்கட்சிப்பூசல்,  திண்டிவனம் நகராட்சியில் 13 தி.மு.க கவுன்சிலர்கள் தனித்து இயங்கியது ஆகியவை அமைச்சர் மஸ்தானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான், அமைச்சர் மஸ்தான் மருமகனுடைய மிரட்டல் வருவதாகவும், திண்டிவனம் நகராட்சியில் அவரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறி, ராஜினாமா கடிதத்தில் 13 தி.மு.க கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு முதல்வரிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தனர். இந்தச் சம்பவம், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது. தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தின்போது, அமைச்சர் மஸ்தானின் தம்பியான காஜா நஜீரின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ஷேக்வாகித் அவர்கள் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க விளையாட்டு மேம்பட்ட அணிச் செயலாளர் தயாநிதி மாறனும்… “விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட மொக்தியார் அலி அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ரோமியன் அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி ராஜாவும் அறிவித்திருக்கின்றனர்.

அறிவிப்பு

அமைச்சர் மஸ்தான் வெளிநாட்டில் புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவரின் மகனும், மருமகனும் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.