தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பொட்டிபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் கிராம உள்ளது. இப்பகுதி விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தில் அவரை விதைகள் வாங்கி பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து 50 க்கு மேற்பட்ட விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். சுமார் 50 நாட்களில் பலன் தரக்கூடிய இந்த அவரை செடிகள் 75 நாட்களுக்கு மேல் ஆகியும் 80 சதவிகித செடிகளில் காய்க்காமல் மலட்டுத்தன்மை உடையதாய் உள்ளதால் மீதமுள்ள 20 சதவிகித செடிகளையும் இந்த மலட்டு செடிகள் அழித்துள்ளது.
இதனால் தரமற்ற விதைகளை கொடுத்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்திய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மலட்டுத்தன்மை கொண்ட அவரை செடிகளோடு வந்து மனு அளித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமகிருஷ்ணாபுரம் விவசாயிகள்”அவரை விதை பயிரிட்டு 45 முதல் 50 நாட்களில் அறுவடை செய்யலாம். ஆனால் 75 நாட்களுக்கு மேலாகியும் அவரை செடியில் பூக்கள் கூட பூக்கவில்லை. உரம் பூச்சி மருந்து என ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு லாபத்தையும் ஈட்ட முடிய வில்லை. விதை வழங்கிய நிறுவனத்திடம் புகார் கூறியும் உரிய பதில் இல்லை. வேளாண் அதிகாரிகளும் உரிய ஆய்வு செய்யாததால் இன்று கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் இதுபோல ஏமாறாமல் இருக்க தனியார் விதை விற்பனை கடைகளில் தரமான விதை விற்பனை செய்யப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அதிகாாிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வாங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.