தூத்துக்குடி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, “நேற்று முன்தினம் சனாதன தர்ம விழாவில் நான் எதைச் பேசினேனோ திரும்பத் திரும்பச் அதையே சொல்வேன். சனாதன விவகாரத்தில் நான் இந்துக்களை மட்டுமல்ல, எல்லா மதத்தினரையும் சேர்த்துதான் கூறினேன். சாதி வேறுபாடுகளைக் கண்டித்து அப்படி பேசினேன் அவ்வளவுதான்.” என்று விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக சனாதனம் குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரகாம்ச ஆச்சாரியா என்பவர் அறிவித்ததோடு, அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்திருதார்.
இந்நிலையில், இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு போதுமே” என்றும் தெரிவித்தார்.
உதயநிதி மீது வழக்கு: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வினித் ஜிண்டால். இவர் டெல்லி போலீஸில் உதயநிதிக்கு எதிராக அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுகள், ஆத்திரமூட்டும் வகையிலும், எரிச்சலூட்டும் வகையிலும், இழிவான மற்றும் தூண்டிவிடும் வகையிலும் உள்ளது. அவருடைய பேச்சு சனாதனத்துக்கு எதிராக உள்ளது. ஒருஇந்துவாகவும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவனாகவும் உள்ள எனது மத உணர்வுகள் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் புண்படுத்தப்பட்டுள்ளன.
சனாதன தர்மத்தை ஒழிப்பதாக அவர் பேசியுள்ளார். அத்துடன் சனாதன தர்மத்தை டெங்கு, கரோனா, மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சனாதனதர்மத்துக்கு எதிரான வெறுப்புணர்வே உதயநிதியின் பேச்சில் வெளிப்படுகிறது. அவர் எம்எல்ஏ.வாகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்றுவேன் என்று அவர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். அவர் அனைத்து மதங்களையும் கட்டாயம் மதிக்க வேண்டும். ஆனால், உள்நோக்கத்துடன் அவர்ஆத்திரமூட்டும் வகையிலும் மக்களை தூண்டி விடும் வகையிலும் பேசியிருக்கிறார். மதத்தின் பெயரால் மக்களிடையே மோதல் ஏற்படும் வகையிலும், பகை ஏற்படும் வகையிலும் பேசியிருக்கிறார்.
‘சனாதன தர்மாவை எதிர்க்க கூடாது. கரோனா, டெங்கு, மலேரியாவை போல் அதை ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியிருப்பது இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்வதற்கு தூண்டிவிடுவது போல் உள்ளது. இது 153ஏ மற்றும் பி, 295ஏ, 298 மற்றும் 505 ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகும். எனவே, உதயநிதி மீது மேற்கூறிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் வினித் ஜிண்டால் கூறியிருக்கிறார்.