தைவானில் ஹைகுய் புயல் ரயில், விமான சேவை பாதிப்பு| Typhoon Haikui hits Taiwan: Train, air service affected

பீஜிங், தைவானில் ‘ஹைகுய்’ புயல் கரையை கடந்ததால், ரயில், விமானம் மற்றும் படகு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிழக்கு ஆசிய நாடான தைவானின் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில், சில நாட்களுக்கு முன் புயல் சின்னம் உருவானது.

ஹைகுய் என பெயரிடப்பட்ட புயல், அதிவேக புயலாக மாறி, தைதுங் கவுன்டி பகுதியில் நேற்று காலை கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியது.

புயல் அபாயம்

கதவுகள், ஜன்னல்கள், சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை முறிந்து விழுந்தன. புயல் கரையை கடக்கும் போது இடைவிடாது கொட்டிய மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது; குடியிருப்புகள், விளைநிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

கனமழை மற்றும் காற்று காரணமாக, 460க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால், பல இடங்களில் ரயில் சேவையும் முடங்கியது.

புயல் எச்சரிக்கை காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கையாக கரையோரம் வசித்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தைவானின் பிரபலமான காற்று பலுான் திருவிழா, வெளிப்புற இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை புயல் காரணமாக நிறுத்தப்பட்டன.

முன்னெச்சரிக்கை

தலைநகர் தைபேவில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சீனாவின் குவாங்டோங் மற்றும் ஹாங்காங்கில், இரு தினங்களுக்கு முன் ‘சோயலா’ என்ற புயல் கடும் சேதத்தை விளைவித்தது.

இருப்பினும், அது போன்ற சேதத்தை ஹைகுய் புயல் ஏற்படுத்தாததற்கு, அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம் என கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.