பலரும் விஜய் ரசிகர்கள்; ஆனால், விஜய் இவருக்கு ரசிகர்! அட, யாருப்பா இந்த டென்சல் வாஷிங்டன்?

செப்டம்பர் மாதத்தின் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. படங்கள் வெளியாவதும், அதற்கு நல்ல விமர்சனங்கள் தெரிவிப்பதும், நிலாவில் மட்டுமா கால் வைப்போம் அடுத்து சூரியனுக்கும் ராக்கெட் விடுவோம் என்று இந்தியா சூரியனுக்கு ராக்கெட் செலுத்தியதும், நயன்தாரா புதிதாக இன்ஸ்டாகிராமிற்கு வந்ததும் என்று பல சுவாரஸ்ய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், வெங்கட் பிரபு தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், பதிவிட்ட ஒரு புகைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே, அவரின் ‘லியோ’ படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், வெங்கட் பிரபு, “முதல்முறையாக தளபதி விஜய்யின் ஃபேன் பாய் மொமண்ட்டைப் புகைப்படம் எடுத்துள்ளேன்” என்று டென்சல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியரின் ‘தி ஈக்குவலைசர்-3’ படத்தைப் பார்த்துக் கொண்டாடும் நடிகர் விஜய்யின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் “தளபதிக்கு fanboy moment கொண்டாடிய காலம் மாறி, தளபதியே fanboy moment கொண்டாடிக்கொண்டிருக்கிறார்”, என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணமிருக்கின்றனர்.

சரி… இருக்கட்டும். அப்படி எந்தப் படத்திற்காக நடிகர் விஜய் `fanboy moment’ கொண்டாடினார்? அந்த நடிகர் யார்? 

தமிழ்த் திரைப்பட துறையில் நாடகத்தில் நடித்து அதிலிருந்து முன்னேறி, திரை உலகில் பாப்புலர் ஆன நடிகர்கள் என்று பார்த்தால் ஏராளம்! அவர்களை வைத்து ஒரு தனி திரைப்படப் பள்ளியே ஆரம்பிக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஹாலிவுட் திரைப்படத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதித்துக் கொண்டிருக்கும் இந்த ‘டென்சல் வாஷிங்டன்!’

யார் இந்த டென்சல் வாஷிங்டன்?

டென்சல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர், ஒரு பிரபல அமெரிக்க நடிகரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். 1980களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி இப்பொழுது தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளார். ‘ரசிகர்களைச் சம்பாதிப்பது ஈஸிதானே?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் 40 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் பதித்துவைத்த இடத்தை துளி அளவும் விட்டுக் கொடுக்காமல், தனது 68 வயதிலும் திரையில் வந்தால் ரசிகர்கள் மத்தியில் இருந்து விசில் கிடைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினம். அதிலும் ஹாலிவுட் திரைத்துறை என்றால் சொல்லவா வேண்டும்!

டென்சல் வாஷிங்டன்

புதுப்புது நடிகர்கள் உருவாகிக்கொண்டேதான் வருவார்கள். டென்சலிடம் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க நடிகராக இருந்து, அமெரிக்க மக்களிடையே பெரும் ஆதரவை இவர் பெற்றிருப்பதுதான். திரைத்துறையில் அனுபவமிக்க இவர், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடித்து தனது ஆதரவாளர்களைச் சம்பாதித்துள்ளார். இப்படி ஹாலிவுட்டில் கலக்கும் இவருக்கு விருதுகள் மட்டும் என்ன எட்டா கனியா? ஆஸ்கர் முதல் அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதான ‘Presidential Medal of Freedom’ வரை வென்றுள்ளார். இவர் வாங்கியுள்ள விருதுகள் ஏராளம்.

1. ஆஸ்கர் விருதுகள் என்று பிரபலமாக அழைக்கப்படும் ‘அகாடமி விருதுகள்’ இரண்டு முறை வாங்கியுள்ளார். 1989-ல் வெளியான ‘க்ளோரி’ படத்திற்காக 1990-ல் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார். 2002-ல் ‘ட்ரெய்னிங் டே’ (2001) படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். 

2. பெர்லின் திரைப்பட விழாவில், 1993-ல் ‘மால்கோம் X’ (1992) மற்றும் 2000-ல் ‘தி ஹர்ரிகேன்’ (1999) படங்களுக்காக சிறந்த நடிகருக்கான ‘Silver Bears’ விருதை வென்றுள்ளார்.

3. கோல்டன் குளோப் விருதுகளில் ‘க்ளோரி’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை வென்றவர், 1990-ல், ‘தி ஹர்ரிகேன்’ படத்திற்கும், 2002-ல் ‘ட்ரெய்னிங் டே’ படத்திற்கும் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 

டென்சல் வாஷிங்டன்

4. புகழ்பெற்ற பிராட்வே தியேட்டர் வழங்கக்கூடிய ‘டோனி விருதுகளில்’ 2010-ல் ‘ஃபென்சஸ்’ படத்திற்கான சிறந்த முன்னணி நடிகர் விருதைப் பெற்றார். 

5. SAG விருதுகள் என்றழைக்கப்படும் Screen Actors Guild Awards, திரைப்படம் மற்றும் பிரைம் டைம் தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த நடிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதிலும் 2010-ல் வெளியான ‘ஃபென்சஸ்’ படத்திற்கு மோஷன் பிக்சர்ஸின் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை 2017-ல் பெற்றார். 

இப்படித் திரைப்பட துறையில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதான Presidential Medal of Freedom பட்டத்தை 2022-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவருக்கு வழங்கியுள்ளார். இவ்விருது அமெரிக்காவின் பாதுகாப்பு அல்லது தேசிய நலன்கள், உலகக் கலாச்சாரம், அமைதி மற்றும் பிற நலன்களுக்காக பங்களித்தவர்களைப் பாராட்டும் நோக்கம் கருதி வழங்கப்படுகிறது.

இவர் நடித்த படங்களில் இவருக்கென்று பெயர் வாங்கிக்கொடுத்த படங்கள், இவரைப் புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற படங்கள் எதுவென்று பார்த்தால், டென்சல் நடித்த சில வாழ்க்கை வரலாற்று படங்களே. அப்படி நடித்த இவரின் முதல் படம் 1989-ல் வெளியான ‘க்ளோரி.’ இது அமெரிக்க உள்நாட்டுப் போரில் யூனியன் ராணுவத்தின் ஆரம்பக்கால ஆப்பிரிக்க – அமெரிக்க படைப்பிரிவுகளில் ஒன்றான 54-வது மாசச்சூசெட்ஸ் காலாட் படை குறித்த ஒரு வரலாற்றுத் திரைப்படமாகும். இதுவரையில் துணை நடிகராகவே நடித்து வந்த டென்சல், 1992-ல் முன்னணி நடிகராக, ஹீரோவாக ‘மால்கோம் X’ திரைப்படத்தின் மூலம் தடம் பதிக்கத் தொடங்கினார்.

மால்கோம் X

முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ‘மால்கோம் X’ திரைப்படம் மற்றொரு வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். மால்கோம் என்பவர் ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க முஸ்லிம் மந்திரி மற்றும் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். அமெரிக்காவிலிருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த ஒரு முக்கியமான நபரும் ஆவார். அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு முக்கிய புரட்சியாளர் ஆவார். டென்சல் இப்படத்தில் மால்கோம் கதாபாத்திரமாகவே நடித்தார்.

“ரூபின் ‘ஹர்ரிகேன்’ கார்டர்” என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மிடில் வெயிட் குத்துச்சண்டை வீரரான ஒருவர், தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். 20 வருடங்களுக்கு பிறகு அவர் ஒரு நிரபராதி என்று அறிவித்த பின்னர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார். அவருடைய வாழ்க்கைக் குறித்தும், சிறையில் அவர் கழித்த காலங்கள் குறித்தும் பேசிய ‘தி ஹர்ரிகேன்’ என்ற படத்தில் டென்சல் நடித்தார்.

The Equalizer 3

நடிகர் விஜய் பார்த்து ரசித்ததாக வெளியிடப்பட்ட ‘The Equalizer 3’ என்ற படம் ஒரு ட்ரைலாஜி கதைத்தொடர். 2014-ல் அதன் முதல் பாகமும், 2018-ல் இரண்டாம் பாகமும், 2023-ல் தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகி இருக்கின்றன. இதே பெயரில் இப்படம், 1980-களில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. இதன் மூலம் நடிகர் விஜய், டென்சலின் ஒரு தீவிர ரசிகராக இருக்கக்கூடும் என்றும் பேச்சுகள் பரவி வருகின்றன.

ராபர்ட் மெக்கால் என்ற ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரி, தன் மனைவியின் மரணத்திற்குப் பின் தன் அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வருகிறார். ஆனால் மற்றொரு பெண்ணைக் காப்பாற்றச் செல்லும் தறுவாயில் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம். 

லியோ படத்திற்காகவும், `விஜய் 68′ படத்தின் அடுத்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய் அமெரிக்காவில் `fanboy moment’ கொண்டாடியது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.