பல்லடத்தில் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணறு அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (செப்.3) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி (69) , ரத்தினாம்பாள் (58), செந்தில்குமார் (48) மற்றும் மோகன்ராஜ் (45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவத்தின் பின்னணி: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை முதலில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதனை தட்டிக்கேட்க வந்த அவரது தம்பி மோகன்ராஜ் மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அந்தக் கும்பலை கண்டித்துள்ளனர். அப்போது அந்த கும்பல் இவர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையான வெட்டியும், தாக்கவும் செய்துள்ளனர்.

இதில் அவர்களது கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வீசப்பட்டன. இதுபோல் முகத்திலும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் 4 பேரையும் வெட்டிச்சாய்ந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர். இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். | வாசிக்க > 4 பேர் கொலை சம்பவம் | பல்லடத்தில் போலீஸார் குவிப்பு; கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.