தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பா.ஜ.க-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக, சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)’ வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட பாட்காஸ்ட்டில் முதல்வர் ஸ்டாலின், “இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வைச் சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பா.ஜ.க முயல்கிறது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தேர்தலுக்கு கொடுத்த எந்தவொரு மக்கள் நல வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம், ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, உழவர்களின் வருமானம் இரண்டு மடங்கு ஆக்குவோம், இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று கூறினார்கள்.
பத்தாண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பைச் சீரழித்துவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதனை மடைமாற்றம் செய்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன், சில பேரின் நலனாகச் சுருங்கிவிட்டது. அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது. இந்தியா முழுக்க இருக்கின்ற விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் வசம் செல்கிறது.
இதையெல்லாம் மறைக்கத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். 2002-ல் குஜராத்தில் பா.ஜ.க விதைத்த வன்முறை விதையானது, 2023-ல் மணிப்பூரை பற்றியெரிய வைத்திருக்கிறது. ஹரியானாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறி, அப்பாவி மக்களின் உயிரையும், சொத்துகளையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு இப்போதும் முற்றுப்புள்ளி வைக்கவில்லையென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. 2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தேர்தல்.
மாநிலங்களின் நிதி உரிமை ஜி.எஸ்.டி பறித்துவிட்டது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி ஐந்து லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரி பகிர்வாக நமக்குத் திரும்பக் கிடைத்தது இரண்டு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் தான். பெற்றதை முழுதாக தர முடியாது என்றால் பா.ஜ.க ஆள்கிற மாநிலத்துக்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது.
பா.ஜ.க ஆளுகின்ற மாநிலம் இரண்டு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால், வரி பகிர்வாக ஒன்பது லட்சத்து நான்காயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 12-வது நிதி குழுவில் 5.305 சதவிகிதமாக இருந்த நிதி ஒதுக்கீடு, 15-வது நிதி குழுவில் 4.079 சதவிகிதமாக குறைந்திருக்கின்றது. தமிழ்நாட்டுக்கு முத்திரை திட்டம் என்று ஒன்றுகூட இந்த ஒன்பது ஆண்டுகளில் தரவில்லை.
சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சோசியலிசம், மாநில தன்னாட்சி, கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை, இவைதான் உண்மையான இந்தியா. அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத் தான் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். பா.ஜ.க-வின் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும், ஹரியானாவும் பலியானதைப் போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டுமென்றால், இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம், இந்தியாவைக் காப்போம், இந்தியாவுக்காகப் பேசுவோம். இனி இது என்னுடைய குரலாக மட்டுமல்லாமல் இந்தியாவின் குரலாக அமையும்” என்று பேசினார்.