புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் யோகிபாபு சந்தித்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்த சட்டப்பேரவைக்கு வந்தார். அங்கு முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாகத் தெரிவித்தார். பேரவையில் தனது அறையில் கோப்புகளை முதல்வர் ரங்கசாமி பார்த்துக் கொண்டிருந்ததால் கேபினட் அறையில் யோகிபாபு காத்திருந்தார். சிறிது நேரத்துக்கு பின் முதல்வரை நடிகர் யோகிபாபு சந்தித்தார். அப்போது முதல்வருக்கு நடிகர் யோகிபாபு சால்வை அணிவித்தார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, அவருக்கு சால்வை அணிவித்தார்.
தொடர்ந்து யோகிபாபுவிடம் நலம் விசாரித்த ரங்கசாமி, “சொந்த ஊர் சென்னைதானா?” என கேட்டார். அதற்கு யோகிபாபு, “பூர்விகம் ஆற்காடு. பிறந்தது சென்னை. தந்தை ராணுவத்தில் வேலை பார்த்தவர். நானும் ஆசைப்பட்டு ராணுவத்துக்கு சென்று ஓராண்டில் திரும்பிவிட்டேன்” என்று குறிப்பிட்டார்.
“தற்போது என்ன படம் நடிக்கிறீர்கள்? என்ன படம் வெளியாகியுள்ளது?” என ரங்கசாமி கேட்டார். அதற்கு, “நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தேன். தற்போது லக்கிமேன் என்ற படம் வெளியாகியுள்ளது” என தெரிவித்த யோகிபாபு, “நீங்கள் படம் பார்ப்பீர்களா?” என கேட்டார். அப்போது முதல்வர் ரங்கசாமி, “முன்பு நான் தியேட்டருக்கே சென்று படம் பார்ப்பேன். தற்போது அதற்கான நேரமும், வசதியும் இல்லை. ஆனால் சாப்பிடும்போது, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது டிவியில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பேன்” என்றார்.
தொடர்ந்து, “வித்தியாசமான கதாபாத்திரம் ஏதாவது நடிக்கிறீர்களா?” என முதல்வர் ரங்கசாமி கேட்டார். அதற்கு, “பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன்” என யோகிபாபு தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட யோகி பாபுவுக்கு திருநீர் இட்டு, நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரங்கசாமி வாழ்த்தியபோது, முதல்வர் காலில் யோகிபாபு விழுந்து ஆசி பெற்றார்.