மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் பதற்றம்: மகாராஷ்டிர முதல்வர் அவசர ஆலோசனை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward – SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தர கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அமைதி ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அவர்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் சமீப காலமாக வலுப்பெற்று வரும் சூழலில், ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் மராத்தா இட ஒதுக்கீடு கேட்டு மனோஜ் பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினர். அவரது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் சூழலில் அவரை அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க போலீஸார் முயற்சித்தனர்.

கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்த ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்துக்கு போலீஸார் பெருந்திரளாகச் சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தக் கலவரத்தில் 15 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார், பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

ஜல்னா மாவட்டத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் பாட்டீல், மராத்தா சமூகத்தினரை சந்தித்துப் பேசினர், இந்நிலையில், போலீஸார் தடியடி நடவடிக்கையைக் கண்டித்து மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மராத்தா கிராந்தி மோர்சா (எம்கேஎம்) அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஏக் நாத் ஷிண்டே அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் மனோஜ் ஜராஞ்சே பாட்டீலுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.