புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் வீடு டெல்லியில் உள்ளது. அந்த வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சென்றார். அப்போது பிஹாரின் புகழ்பெற்ற சம்பிரான் மட்டன் சமைப்பது குறித்த செய்முறைகளை ராகுல் காந்திக்கு, லாலு பிரசாத் கற்றுக் கொடுத்தார். இதுதொடர்பான 7 நிமிட வீடியோவை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது.
லாலுவின் அறிவுரைப்படி ராகுல் மட்டன் சமைப்பதும், இருவரும் அரசியல் ரீதியாக உரையாடுவதும் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. மட்டனுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம் என்று ராகுல் கேள்வி எழுப்ப, அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த லாலு, இரண்டுக்குமே கலவை முக்கியம் என்றார்.
சமையலை எப்போது கற்று கொண்டீர்கள் என்று ராகுல் கேட்க, தனது மலரும் நினைவுகளை லாலு பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, “நான் சிறுவனாக இருந்தபோது எனது மூத்த சகோதரர்கள் பாட்னாவில் வேலை செய்தனர். அவர்களை சந்திக்க பாட்னா வரும்போது, சகோதரர்களுக்காக சமையல் செய்வேன். அப்போதுதான் சமையலை கற்றுக் கொண்டேன்” என்றார்.
ராகுல் காந்தி கூறும்போது, “நான் ஐரோப்பாவில் படித்தபோது மிக எளிமையான உணவு வகைளை சமைப்பேன். பெரிய அளவில் சமையல் தெரியாது” என்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக பாஜக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாலு “பாஜகவின் அரசியல் பசியே இதற்கு காரணம்” என்றார்.
மட்டனை சமைத்து முடித்தபிறகு லாலுவின் குடும்பத்தினர் அனைவருக்கும் உணவை பரிமாறினர். லாலு குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட்ட ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்காவுக்கும் மட்டன் சாப்பாட்டை வாங்கிச் சென்றார். வீடியோவின் இறுதியில் பிரியங்காவும் சம்பிரான் மட்டனை ருசித்து பாராட்டுகிறார்.